யோக விளக்கம்:
இந்த அத்யாயத்தில் பகவானின் விபூதிகளை வர்ணனைகள் இடம்பெறுகின்றன. அர்ஜுனனிடம் தனது பிராபவங்களை பகவானே எடுத்துரைக்கிறான்.
“அர்ஜுனா! இதுவரை நீ கேட்ட என்னுடைய பிரபாவங்களை மீண்டும் சொல்லப்போகிறேன். கேள்! தேவர்களுக்கும் மஹரிஷிகளுக்கும் முந்தியவன் நான். நான் அநாதி! அவர்களுக்கும் என்னுடைய பிறப்பைத் தெரியாது. இந்த பிரபஞ்சத்திற்கு நான்தான் மஹேஸ்வரன் என்றும் நான் பிறப்பற்றவன் என்றும் எவன் அறிகிறானோ அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
இவ்வுலகத்தில் ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை கணிக்கக்கூடிய சாமர்த்தியம், ஞானம், மோகமில்லாமை, பொறுமை, உண்மை, வெளி இந்திரியங்களை அடக்குதல், உள்ளிந்திரியங்களை அடக்குதல், சுகம், துக்கம், உற்பத்தி, நாசம், பயம், பயமில்லாமை, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் இருப்பது, எல்லா இடத்திலும் சமமாக இருப்பது, சண்ட்ஹோஷம், தவம், தானம், கீர்த்தி, அபகீர்த்தி என்று எல்லா பூதங்களிலும் வெவ்வேறு விதமான மனோபாவங்கள் என்னிடத்திலிருந்தே உண்டாகின்றது. என்னுடைய சங்கல்பத்தினால் பிரம்மாவின் மனதிலிருந்து உண்டான ஏழு மஹரிஷிகளும் நான்கு மனுக்களும் உண்டாகி பிரஜாஉற்பத்தி செய்தார்கள். எவன் என்னுடைய இந்த ஈஸ்வரத் தன்மையையும் யோக சக்தியையும் அறிகிறானோ அவன் அசையாத பக்தியோகத்தை அடைகிறான். இதில் சந்தேகமேயில்லை.
நானே இவ்வுலகங்களின் உற்பத்திக்கு காரணம் என்றும் என்னிடமிருந்தே இவ்வுலகில் அனைத்தும் உருவாகின்றன என்பதை அறிந்துகொள்பவர்கள் அறிஞர்கள். அவர்கள் என்னைப் பஜிக்கிறார்கள். என்னிடத்திலேயே மனதை வைக்கிறார்கள். தங்கள் ஜீவனை என்னிடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றிப் பேசி சந்தோஷிக்கிறார்கள். அதில் சுகம் அடைகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு என் சம்பந்தத்தை அடையவிரும்புவர்களுக்கு பீரிதியுடன் என்னை பஜித்துப் பூஜிக்கிறவர்களுக்கு அவர்கள் என்னை அடையும் பக்தியோகத்தை நானே அளிக்கிறேன். இப்படி அவர்களை அனுக்ரஹிப்பதினால் அவர்களின் இருதயகமலத்தினுள் நிலைபெற்று அஞ்ஞான இருளைப் போக்கி பிரகாசிக்கச் செய்கிறேன்.”
கிருஷ்ணரின் இவ்வுரை அர்ஜுனனை மெய்சிலிர்க்க வைத்தது. கண்களில் நீர்க்கோர்க்க கைகளை யாசிப்பது போல வைத்துக்கொண்டுப் பேசுகிறான்.
“தேவரீர் பரப்பிரம்மம். உத்தமமான தேஜஸ் உடையவர். நீர்தான் பரிசுத்தமான பரவஸ்து. எல்லாப் பிராணிகளுடைய சரீரத்திலும் நீர்தான் அந்தர்யாமியாக உள்ளீர் என்று நாரதர், அஸிதர், தேவலர், வியாஸர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதையே நீரும் சொல்கிறீர். என்னை நோக்கிச் சொல்லும் அனைத்தும் சத்தியமென்று நம்புகிறேன். பகவானே! உம்முடைய அவதார மகிமையை முற்றிலும் அறிந்தவர் யாருமில்லை. தேவர்களும் அறியவில்லை. அசுரர்களும் அறியவில்லை. உமது ஸ்வரூபத்தை நீரே உமது ஞானத்தால் அறிகிறீர். தேவரீர் எந்தவிதமான சிறப்புகளால் இவ்வுலகத்தை வியாபித்து நிற்கிறீரோ அவைகளை எனக்கு உரைக்க வேண்டும். நான் பக்தியோகத்தில் சிறந்து நிலைபெற்று எப்போதும் தேவரீரை சிந்தித்துக்கொண்டே இருக்கவேண்டும். பகவானே! எந்தெந்த வஸ்துகளில் என்னால் நீங்கள் சிந்திக்கதக்கவராக இருக்கிறீர்? ஜனார்த்தனரே! உம்முடைய யோகத்தையும் சிறப்புகளையும் (விபூதிகள்) விஸ்தாரமாக மறுபடியும் சொல்லும். உம்முடைய வாக்கியங்கள் அம்ருதமாகவே இருக்கின்றன! கேட்கக் கேட்க திருப்தி உண்டாகாமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றனவே!”
பகவான் சிரிக்கிறார்.
“குருசிரேஷ்ட! மங்களரமான என்னுடைய விபூதிகளில் முக்கியமானவைகளை நான் உனக்குச் சொல்லுவேன். அவைகளுக்கு முடிவில்லை. கேள்!!
எல்லாப் பிராணிகளின் ஹ்ருத்யத்திலும் வசிக்கும் ஆத்மா நானே!
சகல பூதங்களில் ஆதியும் மத்தியும் அந்தமும் நானே!
நான் ஆதித்தியர்களில் விஷ்ணு; ஒளிகளுள் கிரணங்களுள்ள சூரியன்; மருத்துக்களில் மரீசி; நக்ஷத்திரங்களுள் சந்திரன்.
வேதங்களில் சாமவேதமாக இருக்கிறேன்.
தேவர்களில் இந்திரனாயிருக்கிறேன்.
உங்கள் இந்திரியங்களில் மனசாக இருக்கிறேன்.
எல்லாப் பிராணிகளின் சைதன்யம் நானே!
ருத்ரர்களில் சங்கரர் நானே!
யக்ஷராக்ஷசர்களில் குபேரன் நான்!
வஸுக்களுள் பாவகன் நான்!
பர்வதங்களுள் மேரு நான்தான்!
புரோஹிதர்களில் சிரேஷ்டரான பிருஹஸ்பதி நானென்று நீ அறிந்துகொள்!
நான் சேனாதிபதிகளுள் ஸ்கந்தன்.
ஜலாதாரைகளில் சமுத்திரமே நான்!
மகரிஷிகளுள் பிருகுவாக இருக்கிறேன்!
சொற்களுள் ஒரெழுத்தான பிரணவமாயிருக்கிறேன்.
யக்ஞங்களுள் ஜபயக்ஞம் நானே!
ஸ்தாவரங்களுள் இமயமலை நானே!
எல்லாமரங்களில் அரசமரமாயிருக்கிறேன்!
தேவரிஷிகளுள் நாரதன் நானே!
கந்தர்வர்களுள் சித்ரரதன் நானே!
சித்தர்களுள் கபிலமஹரிஷி நானே!
குதிரைகளில் அமிர்தத்துடன் தோன்றிய உச்சைசிரவஸ் நான்!
யானைகளில் சிறந்த ஐராவதம் நான்!
மனிதர்களுள் நானே அரசன்!
ஆயுதங்களில் வஜ்ராயுதம் நான்!
பசுக்களில் காமதேனுவும் நானே!
பிரஜைகளின் உற்பத்திக்குக் காரணமான மன்மதனாகவும் இருக்கிறேன்.
ஒருதலை ஸர்ப்பங்களுள் வாசுகியாகவும் அநேகம் தலையுள்ள நாகங்களில் அனந்தனாகவும் இருக்கிறேன்.
ஜலதேவதைகளுள் வருணன் நானே!
பித்ருதேவதைகளுள் அர்யமாவாக இருக்கிறேன்.
தண்டனை விதிப்பவர்களுள் யமனாக இருக்கிறேன்.
தைத்யர்கள் எனப்படும் ராக்ஷசர்களில் பிரஹ்லாதனாக இருக்கிறேன்.
கணக்கிடுபவர்களுள் காலன் நானே!
மிருகங்களுள் சிம்மம் நான்!
பக்ஷிகளுள் நான் வினதையின் புத்திரனான கருடன்.
பரிசுத்தம் செய்யும் வஸ்துகளில் நான் வாயு!
சஸ்திரதாரிகளுள் நானே ராமன்!
மீன்களுள் நான் சுறா மீன்!
நதிகளுள் கங்கை நானே!
வித்தைகளுள் ஆத்மவித்தையாக இருக்கிறேன்
வாதம் செய்பவர்களின் வாதம் நானே!
அக்ஷரங்களுள் நான் அகாரமாக எல்லா எழுத்துகளுள்ளும் ஊடுருவி நிற்கிறேன்.
எல்லா தொகை மற்றும் தொடர்களில் உம்மைத் தொகை எனப்படும் துந்துவ ஸமாசம இருக்கிறேன். அதில் முன்னும்பின்னுமிருக்கும் இரண்டு சொற்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.
மஹாபிரளய காலத்திலும் அழியாத அக்ஷயகாலமாகவும் இருக்கிறேன்.
பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்த ஹிரண்யகர்ப்பனான நான்முகனும் நானே!
நான் எல்லாவற்றையும் அழிக்கும் மரணதேவதையாகவும் இனி உண்டாகப் போகின்ற வஸ்துக்களின் பிறவியைக் கொடுப்பவனுமாகிறேன்.
கீர்த்தி (புகழ்), லக்ஷ்மி (செல்வம்), வாக் (சொல்வண்மை), ஸ்ம்ருதி (நினைவாற்றல்), மேதா ( நினைவில் உள்ளதை தக்க சமயத்தில் வெளிப்படுத்துவது), த்ருதி (தைரியம், உறுதி), க்ஷமா (பொறுமை) ஆகியவற்றின் அபிமான தேவதையாக நானே இருக்கிறேன்.
சாமத்தில் பிருஹத்சாமமாக* இருக்கிறேன்!
சந்தஸுகளுள் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்!
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!
ருதுக்களுள் வசந்த ருதுவாகிறேன்!
நானே வஞ்சகர்களின் சூதாட்டமாகவும் திறமை படைத்தவர்களின் திறமையாகவும் வெற்றிகொள்பவரின் வெற்றியாகவும் தீர்மானம் செய்யும் சக்திபடைத்தவர்களின் தீர்மானமாகவும் சத்வகுணம் படைத்தவர்களின் சத்வகுணமாகவும் இருக்கிறேன்!
பாண்டவர்களுள் நான் தனஞ்சயனாக இருக்கிறேன்!
முனிவர்களுள் நான் வியாஸராக இருக்கிறேன்!
கவிகளுள் நான் சுக்ராச்சாரியாராக இருக்கிறேன்!
தண்டிப்பவர்களின் தண்டனையும் நானே!
ரகஸ்யங்களுள் மௌனம் நானே!
ஜெயிப்பதற்கு ஆசையிருப்பவர்களுக்கு அதற்கான உபாயமாக இருக்கிறேன்.
தத்வ ஞானிகளின் தத்துவம் நானே!
அர்ஜுனா! சகல பூதங்களுக்கும் எது ஆதாரமோ அது நானே!
ஸ்தாவரஜங்கமமாக எவையெல்லாம் இங்கே படைக்கப்படுகிறதோ அது என்னையன்றி வேறெதுவுமில்லை!
இப்படி நான் சொல்லும் என் விபூதிகளுக்கு முடிவே கிடையாது. இதை விஸ்தாரமாக நீ எண்ணினாலும் இது சுருக்கமே! ஐஸ்வர்யத்தையுடையதும் காந்தியையுடையதும் நல்ல முயற்சியுள்ளதுமாக எந்த வஸ்து இருந்தாலும் அது என்னுடைய தேஜஸின் ஒரு அம்சமாக உருவாக்கப்பட்டது.
இவ்வளவு விஸ்தாரமாகச் சொல்வதற்கு பதிலாக ஒன்றேயொன்றைச் சொல்கிறேன் கேள்!
அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஸேந ஸ்திதோ ஜகத்||
இவ்வுலகமனைத்தும் என்னுடைய ஓர் அம்சமாக தரித்துக்கொண்டிருக்கிறேன்.”
ஸ்ரீகிருஷ்ணர் தனது விபூதிகளைப் பற்றிப் பேசப் பேச அர்ஜுனன் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிந்தது. பக்தியோகத்தினுள் நுழைந்துவிட்டான். ஸ்ரீகிருஷ்ணர் அடுத்தது அர்ஜுனனுக்கு என்ன சந்தேகம் எழும் என்று மந்தகாசப் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
*பிருஹத்சாமம் – சாம வேதத்தில் இந்தப் பகுதி அழகிய நடை மிகுந்தது. இதில் பரமேஸ்வரன் இந்திரனாக வர்ணிக்கப்படுகிறார்.
ஒரு பாசுரம்:
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ,
கடல் ஞாலத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே.
– திருவாய்மொழி 5 – 6 – 1 – ஸ்ரீநம்மாழ்வார்
பொருள்:
கடலுடன் கூடிய இந்த உலகத்தைப் படைத்தவன் நானே என்றும் கடலுடன் கூடிய இந்த உலகமே நான்தான் என்றும் மகாபலியிடமிருந்து இவ்வுலகத்தைக் கொண்டவனும் நானே என்றும் பிரளயத்தில் கடலுக்குள் புதையுண்ட இதை மேலே கொண்டு வந்தவனும் நானே என்றும் இவ்வுலகத்தைக் காப்பதற்காக ஊழிக் காலத்தில் இதை உண்டவனும் நானே என்றும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலிருக்கும் இவள் சொல்வதெல்லாம் இவள் மீது திருமாலாகிய ஈசன் ஆவிர்ப்பவித்துவிட்டான் என்றே தோன்றுகிறது என்கிறாள் தாய். எல்லாம் அவனே என்ற பரதத்துவம் இப்பாடலில் வெளிப்படுகிறது.
ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – விபூதி யோகச் சாரப் பாசுரம்:
எல்லையில்லா தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
எல்லையில்லா விபூதி எலாம் தனதானமையும்
எல்லையில் பத்தி தனை எழுவிக்கத் திருவருளால்
எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே
பொருள்:
தன்னுடைய பிரபாவங்களில் எல்லையில்லா ஈசன் இந்திரன் மைந்தனான அர்ஜுனனுக்கு அளவற்றா பக்தியை உண்டாக்குவதற்கு தனது திருவருளால் அளவற்ற தன் சீலங்களாகிய கல்யாண குணங்களாகிய இனிமையான அமுதக் கடலையும் எல்லையில்லாமல் அளவிட்டுக் கூறமுடியாமல் இந்தப் பிரபஞ்சமெங்கும் தன்னுடைய பிரபாவத்திற்கு உட்பட்டு இருப்பதையும் உபதேசித்தான்.
===== விபூதியோகம் நிறைவடைந்தது =====
இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs