தினம் ஒரு குறள்
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
தெளிந்த நல்லறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வி என இம்மூன்றிலும் நன்கு தேர்ச்சி பெற்று அனைவராலும் மதிக்கப்படும் நிலை எய்தியவன், ஆள்பவர்களின் சார்பாக மாற்று அரசிடம் தூது செல்வதற்குத் தகுதியானவன் ஆதலால், அத்தகைமை பெற்றோரைத் தூதுக்குரியவராக்க, வினை எளிதில் முடியும்.
அறிவிருக்கும் இடத்தில் வடிவு இருக்கா; வடிவு இருக்கும் இடத்தில் கல்வி இருக்கா; கல்வி இருக்கும் இடத்தில் அறிவு இருக்கா! ஆக, இம்மூன்றும் ஓரிடத்தில் இருப்பது அரிதாகையால், அவ்வண்ணம் சொல்கிறார் வள்ளுவர்.
ஒன்றை நினைவில் கொள்க! கல்வி வேறு; அறிவு வேறு! அறிவுக்குக் கல்வி தேவையில்லை! ஆனால், கல்வி நிச்சயம் அறிவைப் புகட்டுவதாக இருக்க வேண்டும்!
ஏட்டில் இருப்பது கல்வி! ஏற்றி நிற்பது அறிவு! ஒன்றுக்கு மற்றொன்று தேவை! ஆனால், முழுமை அதுவல்ல!!