தினம் ஒரு குறள்
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
உயிருக்கே அச்சுறுத்தல் வரினும் அதற்காக கிஞ்சித்தும் அஞ்சாமல், தன் தலைவன் சொன்ன வார்த்தைகளை உறுதியோடு மாற்று அரசனுக்கு எடுத்துரைப்பவனே தூதனாவான்.
திருக்குறளின் பெருமையை முற்றிலும் உணராத தலைமுறையாக இருப்பது, இற்றைய தலைமுறை மட்டுமல்ல; ஆட்சியாளர்களுமே என எண்ணும்போது, சிந்தனை சற்றே சோர்வுறுகிறது! ஆம்!
வாழ்ந்து காட்டும் தலைவர்கள், வழி நடத்தும் சான்றோர்கள், வையத்து நலம் போற்றும் ஆட்சியாளர்கள் இல்லாத ஜனநாயகத்தால் ஒருபோதும் சமூகம் பயனடையப் போவது கிடையாது.
நெறி நூல்களைச் சாத்திரமாகப் பழக்கக் கற்றுக் கொள்ளாதவரை, இது போன்ற நெறி நூல்களால் எவ்விதப் பயனும் விளையாது.
தற்பெருமை பேசி, தனக்கும் தெரியும் எனக் காட்டி, தன்னை முன்னிறுத்தும் தரித்திரக் காரர்களால், தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது வாழ்வியல் கண்கூடு.
நிதானமாக உங்கள் உள்ளத்தில், உங்கள் இல்லத்தில் நடப்பதையும், உங்களைச் சுற்றி நடப்பதையும் கூர்ந்து கவனியுங்கள். அப்போது புரியும் உங்களுக்கே, அறத்தை விட்டு, பண்பாட்டை விட்டு, அடையாளத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகி நிற்கிறோம் என்பது!
ஒருவேளை, அப்படியெல்லாம் இல்லை! இன்னமும், தமிழ் கண்ட நெறியில், தமிழர் பண்பாட்டில்தான் எங்கள் வாழ்க்கை செல்கிறது என்று உங்களால் சொல்ல முடியும் என்றால், உங்களைப் போன்ற சிலரால்தான் தமிழ் இன்னமும் வாழ்கிறது எனப் பொருள் கொள்ளுங்கள்! அத்தோடு நில்லாமல், அடுத்த தலைமுறைக்கு அதனைச் சொல்லிக் கொடுங்கள்! விதைகளை விதைக்காமல் அறுவடையை எதிர்நோக்குவது, நம்பிக்கையைத் தளர்த்தி வாழ்வை சூன்ய மாக்கி விடும்!
இதுகாறும் பார்த்த தூது என்ற அதிகாரத்தில், முதல் இரண்டு பாட்டில் பொதுவான இலக்கணமும், அடுத்த ஐந்து பாட்டில் அடுத்த ஐந்து பாட்டில் தூதுவனுக்கான சிறப்புத் தகுதியைச் சொல்லி வைத்தார் வள்ளுவர். கடைசி மூன்று பாட்டில், உறுதியைச் சொல்லி, ஒரு நாட்டை அடுத்த நாட்டிற்குப் பிரதிபலிக்கும் பணியில் இருப்பவர்கள் எத்தகைய பண்பு நலன்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அன்றைக்கே பாட்டில் வைத்த வள்ளுவனைப் பாட்டனாகக் கொண்ட சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதில் பெருமை கொள்க! ஏனைச் சிறுமைகள் தானே ஒழியும்!!