தினம் ஒரு குறள்
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.
தன் தலைவன் சொன்ன வார்த்தையை பொருள் திரியாமல் சொல்லும் வல்லமை படைத்தவனான தூதனானவன், ஒருவேளை தன் வார்த்தைகளால் தமக்கு வரும் அச்சுறுத்தலுக்காகத் தடுமாறி, தரம் குறைந்து, தன்னிலை தாழ்ந்து சொல்லும் வார்த்தைகளை உதிர்க்காத உறுதி படைத்தவனாக இருக்க வேண்டும்.
இது ஏதோ குறள்; செய்யுள்; தகுதிக்காக மனனம் செய்து தேர்வில் தேற மட்டுமே வழிவகுப்பது என விட்டு விட முடியுமா? சிந்தியுங்கள்! நம் முன்னோர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அக்கறைக்கும் இத்தகைய அறநூல்களே சாட்சி!
கணிணி யுகத்தில் கற்பவை நிறுத்திப் பயிற்சியாக்கும் எண்ணம் தொலைத்து, எதிர்காலத்தை இருட்டாக்கும் என்னருமை இளைய சமுதாயமே, உனக்கு திருக்குறள் போன்ற அறநூல்களைச் சரியான முறையில் எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர்கள் அரிதாகி விட்டனரே என நினைக்கும் போது, உள்ளம் பதறுகிறது! உணர்வு மேலெழுகிறது! உண்மை வலிக்கிறது! நம்பிக்கை மட்டும் நானிருக்கிறேன் எனத் துணைக்கு வருகிறது!