சமீபத்தில் புத்தகமாய் வெளியான யதி நாவலை ஈ புக்காகப் படித்து முடித்தேன்.
நாவல் என்பதைவிட இந்திய யோகிகளின் பல்வேறு முகங்களைக் காட்டிச் செல்கிறது நாவல். கதை ஒரு குடும்பத்தைச் சுற்றிச் சுழல்வதால் இது நாவலாக வடிவம் பெற்றுள்ளது. இவர்களெல்லாம் யோகிகளா, இவர்கள் மட்டும்தான் இந்திய யோகிகளின் முகங்களா என்றால் வெகு நிச்சயமாய் இல்லையென்பேன். இப்படிப்பட்ட யோகிகளும் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய புரிதலை இந்நாவலில் பெறலாம். கபிலரில் ஆரம்பித்து இடாகினி பேய்களை வசியம் செய்யும் கும்பல்கள் வரை இந்நாவலில் வருகிறார்கள். யோகிகள், சித்தர்கள், தவிர ஸ்கந்த சஷ்டி கவசத்தில் வரும் மிகு பல பேய்களும், இரிசிக்காட்டேரியும் இத்துன்ப சேனையும் எனப் பலப்பல விஷயங்களெல்லாம் இந்த நாவலில் வருகிறது.
காற்றையுண்டு வாழ்வோர், தீயில் உடல் வேகாமல் தியானிப்போர், கஞ்சாவையே உணவாய் உட்கொள்வோர், சித்து விளையாட்டு செய்வோர், கிருஷ்ண பக்தி இயக்கத்தோர், கடவுளின் இருப்பை ஒரு விஷயமாய்க் கொள்ளாத சாமியார், இண்டர்நேஷனல் அளவில் ஆயுதம் வியாபாரத்தில் தரகு செய்யும் சாமியார் எனப் பலவகையான பரதேசிகள் கதையில் உலவுகின்றனர். ஒரு குடும்பத்தின் கதைதான், ஆனால், அதைச் சொன்ன விதத்தில் நிகழ்ச்சிகளைக் கோர்த்ததில், அதை வாசிக்கத் தகுந்ததாக்கியிருக்கிறார். ஆனாலும், பா.ராகவனின் பலமாக நான் கருதும், ‘தனது எழுத்தால் வாசகனைக் கட்டிப்போடும் வித்தை’ யதி-யில் முழுவதும் கைவரப்பெறவில்லை.
இந்திய யோகிகளைப் பற்றிய கதைகளைப் படிக்க விரும்புவோர்களால் நிச்சயம் வாசிக்க இயலும்; ஆனால், திருப்தியுறுவார்களா என்பது சந்தேகமே.
நாவல் திக்கின்றி அலைவதை, எதை முழுதாய்ச் சொல்வது அல்லது எதை விடுவது என்பதில் கொஞ்சம் திணறித்தான் போயிருக்கிறார். தொலைக்காட்சிகளின் நாடக வசனங்கள்போல ஒவ்வொரு சம்பவமும் நீளநீளமாய்ப் போகிறது. கதை நாயகர்களின் அம்மா செத்துத் தொலைந்தால் பரவாயில்லை என எண்ணும் அளவு அந்தப் பகுதி நீளமோ நீளம். இறந்து ஆவியாய் அலைபவள் ரிஷியளவுக்குத் தியானம் செய்து வரங்கள் பெறுவதும், கண்ணுக்குத் தெரியாமல் அலையும் ரிஷிகளும், கண்கட்டு வித்தைகளின் சாத்தியங்களும், மதவித்தியாசமின்றி இருக்கும் சித்தர்களும், பக்கிரிகளும் கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றனர். காசியில் ஏசு வந்து தனது இருப்பைக் காட்ட சிலுவையைப் போட்டுச் செல்கிறார். சர்வ மத சாமியார்களைக் காட்ட விரும்பிச் சேர்த்ததுபோல துருத்திக்கொண்டு தெரிகிறது. அந்த இரண்டு வரிகள் இல்லாமல் இருந்தாலும் இந்த நாவலில் எந்தவித மாற்றமும் இருந்திருக்காது. கதையில் வரும் ரிஷிகள், பக்கிரிகள் எல்லாம் மின்னலென அவ்வப்போது கவர்கிறார்களே தவிர, ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில், இந்த நாவலுக்கு பாரா உழைத்த உழைப்பிற்கு நியாயம் செய்வதாக இல்லை.
ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்பு எல்லாம் அருமையாய் இருக்கிறது. வாசிக்க ஆரம்பித்துவிட்டதால் முடித்துவிட மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. நாவலில் முன்னுரையென வந்த ஹரன்பிரசன்னாவின் சிறுகுறிப்பு மிகைப்படுத்தலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நிச்சயம் அவர் நாவலை முழுதாய் வாசித்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
பா.ராகவன் நிறைய எழுதி சாதித்து விட்டார். இந்த ஒரு நாவல் எனக்குப் பிடிக்காததால் அவரைக் குறைத்து மதிப்பிட மாட்டேன். நிச்சயம் இதைவிட நல்ல நாவலை இந்திய ஆன்மீகப் பரப்பை மையமாக வைத்து எழுத வேண்டும் என்பது எனது அவா.
– ஜெயகுமார் ஸ்ரீநிவாசன், அபுதாபி
நாம் நாவலுக்கு முன்னுரை எதுவும் எழுதவில்லை. ஒரு டெக்னிகல் பிரச்சினையால் அப்படி வந்துவிட்டது. தகவலுக்காக.