தமிழகத்தின் அரசியல் ராஜதந்திரிகளாக மிளிரும் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்
2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் தங்கள் தலைமையில் மெகா கூட்டணியை அமைத்துப் போட்டி இடுகின்றன. அதிமுக கூட்டணி கடந்த 2016 சட்டசபை தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் அடிப்படையில் பார்த்தால் 52% வாக்குகளை வாரிக் குவித்துள்ளது. திமுக அணி 42.5% வாக்குகளைப் பெற்று உள்ளது.
அரித்மெட்டிக் படி அதிமுக முன்னிலையில் இருப்பது லோக்சபா தேர்தலில் எடுபடுமா என்ற கேள்வி, அதிமுக அணி முன்னுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதை எடப்பாடியும், ஓ.பி.எஸ் சும் எப்படி அணுகி உள்ளார்கள்? அவர்களின் ராஜ தந்திரம் எந்த அளவுக்கு வேலை செய்துள்ளது? வலுவான கூட்டணி அமைத்தது, கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கியது என்பதன் அடிப்படையில் பார்த்தால் நிச்சயமாக எடப்பாடியும் பன்னீர் செல்வமும் நிச்சயமாக ராஜ தந்திர ரீதியில் செயல்பட்டுள்ளார்கள் .
பாமகவிற்கு 7 லோக்சபா தொகுதிகள் என்று பாமகவை இந்தக் கூட்டணிக்குள் கொண்டு வந்த பிறகு தான், திமுக அணி 40 க்கு 40 ஜெயிக்க இயலாது என்பதை அரசியல் விமர்சகர்களே சொல்லும் படி ஆக்கியது அவர்களின் முதல் ராஜ தந்திரமாகப் பார்க்கப்பட்டது. பாமக அதிமுக கூட்டணிக்கு வரும் வரையிலும், பாஜகவுடனும் அதிமுகவுடனும் , யார் தமிழகத்தில் கூட்டணி வைப்பார்கள் என்ற கேள்வியை திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் போன்றவை ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தைக் கடந்த ஒரு வருடமாக செய்து வந்தார்கள். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாமகவின் வருகை. அங்கிருந்தே 2019 க்கான தேர்தல் வேகம் சூடு பிடித்தது. அதுவரையிலும், திமுகவே தோழமைக் கட்சிகள் , கூட்டணிக் கட்சிகள் என்று இரு மொழியில் பேசி வந்தது.
அதாவது பாமக, தேமுதிகவின் முடிவைப் பொறுத்து, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த கட்சிகளைக் கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்று முடிவெடுக்காமல் கால தாமதம் செய்து வந்தது திமுக. பாமகவுடன் அதிமுக 7 லோக்சபா + 1 ராஜ்யசபா இடங்களை விட்டுக் கொடுத்து தங்கள் அணிக்குக் கொண்டு வந்ததுதான் தாமதம். கூடவே பாஜகவுடனான கூட்டணி ஒப்பந்தம் என ஒரு அடி வேகமாக முன்னெடுத்து வைத்தது அதிமுக. அவ்வளவுதான், திமுக வேக வேகமாக காங்கிரசுக்கு 9+1 இடங்களை ஒதுக்கி தங்கள் தரப்பிலும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது என்று கணக்குக் காண்பித்தது.
தேமுதிக பாஜக தலைவர்களிடம் பேசியது அறிந்தவுடன், திமுகவின் தலைவரே தேமுதிக வருமா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தது. வழக்கம் போல தேமுதிக இழுத்தடிக்க, கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் திமுகவை கூட்டணியை உறுதி செய்யும் நிலைக்குத் தள்ளியது. தேமுதிகவின் ஸ்திரத்தன்மையற்ற தன்மையால் அதிமுகவும் பாதிப்புக்கு உள்ளானது. ஆனால் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தேமுதிக வராது என்பது தெரிந்தவுடன் அவர்களின் தகுதியை மீறி அள்ளிக் கொடுத்து அரவணைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது திமுக. அதுவே எடப்பாடி பன்னீர் செல்வத்தின் ராஜ தந்திர நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி தான்.
சட்டசபை இடைத்தேர்தலை மனதிற் கொண்டே பாமகவிற்கு 7+1 தொகுதிகளை விட்டுக் கொடுத்தாலும் தொகுதிகள் ஒதுக்கியதில் தனது ராஜ தந்திரத்தைக் காட்டி உள்ளனர் எடப்பாடியும் பன்னீர் செல்வமும்! 20 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுகவுடன் 8 தொகுதிகளில் தான் நேரடியாகக் களம் காண்கிறது. ஆனால் பாமகவின் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளை திமுக நிற்கும் தொகுதிகளை பார்த்து பாமகவிற்கு ஒதுக்கி இரண்டாம் ரவுண்டில் தங்களை கள அரசியல்வாதிகள் என்பதை நிருபித்துள்ளனர் இந்த இரட்டையர்கள்.
அடுத்து சென்னை. சென்னையில் வலுவாக உள்ள தென் சென்னையை மட்டும் அதிமுக வைத்துக் கொண்டு, மத்திய சென்னையையும், வட சென்னையையும் பாமக, தேமுதிகவிற்குக் கொடுத்து போட்டியிட வைத்துள்ளது அதிமுக. தென் சென்னையில் சைதாப்பேட்டை, வேளச்சேரியில் பாமகவிற்கும், சில பகுதிகளில் பாஜகவிற்கும் செல்வாக்குள்ள பகுதிகளும் உள்ளன. அதிமுகவிற்கும் சற்று பலம் பொருந்திய தொகுதியாக தென் சென்னை இருப்பதால் அதை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டது அதிமுக.
அடுத்து சேலம் (எட்டு வழிச்சாலை), பொள்ளாச்சி (தற்போதையை பாலியல் கொடுமை) என இரு பிரச்சினைக்குரிய தொகுதிகளை நாங்கள் வைத்துள்ளோம் என்று அதிமுக கணக்குக் காட்டினாலும் அதிமுக , பாமக, தேமுதிகவிற்கும் வலு இருப்பதால் வெற்றி உறுதி என்று தெரிந்த பிரச்சினைக்குரிய இரு தொகுதிகளையும் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளதாகக் காட்டி, தூத்துக்குடியை பாஜகவிடத்தும் (ஸ்டெர்லைட்), கடலூர் (கஜா புயல்) பாமகவிடத்தும் கொடுத்து நிற்க வைத்துள்ளனர் எடப்பாடியும், பன்னீர் செல்வமும். திண்டுக்கல் கூட திமுகவிற்கு சாதகமான தொகுதிதான். பாமகவிற்கு ஒதுக்கி ஒதுங்கிக் கொண்டது அதிமுக.
அடுத்ததாக , தினகரன் வலுவாக உள்ள தென் மாவட்டங்களில் அதிமுக மிகத் தெளிவாக காய்களை தேர்தலுக்கு முன்பே நகர்த்தி விட்டுள்ளது. குறிப்பாக முக்குலத்தோர் அதிகமுள்ள பகுதிகளில் தினகரன் பிரிக்கும் வாக்குகளால், அதிமுக தோற்றது என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டுள்ளது அதிமுக. ஆகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை இது.
நாளை இத்தொகுதிகளில் தோற்றால் , இரட்டை இலை நிற்காமல் இருந்ததே அத்தொகுதிகளை அதிமுக அணி இழந்ததற்குக் காரணம், தினகரன் அல்ல என்று சொல்வதற்கு ஏற்றார்போல தொகுதிகளை ஒதுக்கி உள்ளது அதிமுக. ராமநாதபுரம் (பாஜக), சிவகங்கை (பாஜக), தூத்துக்குடி (பாஜக), கன்னியாகுமரி (பாஜக), விருதுநகர் (தேமுதிக) , தென்காசி (புதிய தமிழகம்) என ஏழு தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்து விட்டு கழன்று கொண்டது அதிமுக. இங்குதான் எடப்பாடியும், பன்னீர் செல்வமும் தெளிவாக அரசியல் சதுரங்கத்தை ராஜ தந்திரமாக அணுகி உள்ளனர்.
மதுரை, தேனி இரண்டையும் எடுத்துக் கொண்டதன் பின்னணியில் மதுரையில் கம்யுனிஸ்ட் நிற்கிறது. ஆகையால் எதிர்கொள்வது எளிது , மேலும் அழகிரி திமுகவிற்கு எதிராக உள்ளடி வேலை செய்தால் அது தங்களுக்கு சாதகம் என்பதாலும், மேலும் சில தேவர் அமைச்சர்கள் அப்பகுதியில் உள்ளவர்கள் என்பதால் ரிஸ்க் எடுத்துள்ளது. தேனியில் காங்கிரஸ் நிற்கிறது. இங்கு பன்னீர்செல்வம் இருப்பதால் தேவர் சமூக வாக்குகளில் பாதியைப் பெற இயலும் என்பதால் எதிர்கொள்கிறது. தஞ்சையை வாசனுக்கு ஒதுக்கி விட்டனர். இவ்வாறாக தினகரன் வாக்கு பிரிக்கும் இடங்களில் முற்றிலுமாக ஒதுங்காவிட்டாலும், மிகத் தெளிவாக தொகுதியைத் தேர்ந்தெடுத்து காய் நகர்த்தியுள்ளனர் எடப்பாடியும் பன்னீர் செல்வமும்.
தெற்கு பகுதியில் திருநெல்வேலியில் நிற்கிறோம் என்று கணக்குக் காண்பிக்க ஒரு தொகுதி மட்டும் கைவசம் வைத்துள்ளது. அதுவும் தொண்டர்கள் சோர்ந்து போய் விடக்கூடாது என்பதால் இருக்கக் கூடும்.
மேற்கு மண்டலத்தில் 8 தொகுதிகளில் 6 தொகுதிகளில் அதிமுக களம் இறங்குகிறது. மேலும் திமுகவைத் தவிர்த்து நிற்கும் எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளை எதிர்கொள்வது எளிது என்பதை உணர்ந்தே தொகுதிகள் உடன்பாடு செய்துள்ளது. அதற்காக முற்றிலுமாக கூட்டணிக் கட்சிகளைக் கோபப்படாத வகையிலும் பார்த்துக்கொண்டுள்ளனர் அதிமுகவின் இரட்டையர்கள்.
விழுப்புரம், தர்மபுரி என பாமகவிற்கு வெற்றி தொகுதிகளையும் ஒதுக்கி உள்ளது. தேமுதிகவிற்கு அவர்கள் விரும்பிய கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஒதுக்கி உள்ளது. பாஜகவிற்கு அவர்கள் விரும்பும் கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. இதர சிறு கட்சிகளுக்கும் அவர்கள் கேட்ட தொகுதியை ஒதுக்கி உள்ளது அதிமுக.
2019 தேர்தலையும் சட்டசபை இடைத் தேர்தலையும் அதிமுக எதிர்கொள்ளும் விஷயத்தைப் பார்த்தால் ஒன்றுபுரிகிறது. எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பார்ப்பதற்கு வேண்டுமானால் ஒன்றும் தெரியாதவர்கள் போலத் தோன்றி இருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் தாங்கள் கள அரசியல்வாதிகள். அடிமட்டத்திலிருந்து உழைத்து இந்த உன்னத நிலையை அடைந்துள்ளோம் என்பதைத் தங்கள் நடவடிக்கைகள் மூலம் காட்டுகிறார்கள். அதை எங்களுக்கான நேரம் வரும் போது காட்டுவோம் என்று பதுங்கி இருந்துள்ளார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. புலிகள் பதுங்கியது பாய்வதற்குத் தான் என்பதை எடப்பாடியும் பன்னீர் செல்வமும் தற்போதைய நடவடிக்கைககளில் காட்டி உள்ளனர். அதிமுக அணி ஆட்சியையும் லோக்சபா தேர்தலில் 15 இடங்களையும் பிடித்தாலே போதும். எடப்பாடியையும் பன்னீர் செல்வத்தையும் வலுவான சக்திகள் என்று தமிழகமே பாராட்டும் நிலை வரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.