சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

ஆச்சார்ய வினோபா பாவே – நினைவுநாள் நவம்பர் 15

“எனது சீடனாக வந்து எனது ஆசிரியராக மாறியவர்” என்று காந்தியால் புகழப்பட்டவர், தனிநபர் சத்தியாகிரஹத்தின் முதல் போராளி,  நாடு முழுவதும் சுற்றிவந்து நிலச்சுவான்தார்கள் இடமிருந்து நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு அளித்த பூதான இயக்கத்தின் தந்தை, பலமொழி அறிஞர், காந்தியின் ஆன்மீக வாரிசு என்று அறியப்படும்  ஆச்சாரிய வினோபா பாவேயின் நினைவுநாள் இன்று. 

இன்று மும்பையின் பகுதியாக விளங்கும் கொலாபா பகுதியில் வசித்து வந்த நரஹரி சம்புராவ் – ருக்மணி தேவி தம்பதியரின் மூத்த மகனாக 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் பிறந்தவர் விநாயக் நரஹரிராவ் என்னும் வினோபா பாவே. இறைநம்பிக்கையை கொண்ட தாயாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்டதால் சிறுவயதிலேயே இதிகாச புராணங்களையும், கீதையையும் வினோபா முழுமையாகக் கற்று இருந்தார். 

1916ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத மும்பைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய  இருந்த வினோபா  தனது கல்விச் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் தீயில் வீசிவிட்டு மும்பை செல்லாமல் காசிக்கு பயணமானார். ஆன்மீக சாதனையில் ஈடுபடத்தான் அவர் நினைத்து இருந்தார். ஆனால் காலம் அவர்க்கு வேறு வழியைக் காட்ட தீர்மானித்தது. காசியில் இருந்தபடி காந்தியோடு கடித தொடர்பை ஏற்படுத்தினார். காந்தி அவரை அஹமதாபாத் நகரில் அவர் தங்கி இருந்த கோசரப் ஆசிரமத்திற்கு வருமாறு அழைத்தார். அந்த சந்திப்பு வினோபாவை முழுவதுமாக மாற்றியது. 

தனிப்பட்ட ஆன்மீக சாதனைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் தேசப்பணிக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்டார். காந்தியின் அறிவுரையின்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்தா பகுதியில் அமைந்துள்ள ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கே அவர் மஹாராஷ்டிரா தர்மா என்ற மராட்டி மாத இதழை நடத்தலானார். பின்னர் அந்த இதழ் வார இதழாக வெளிவரத் தொடங்கியது. அதில் தொடர்ந்து உபநிஷதங்களின் உரைகளை எழுதலானார். கதர், கைத்தொழில், சுகாதாரம், கல்வி என்று காந்தியின் பல்வேறு தேச புனர்நிர்மாணப் பணிகளை வினோபா மேற்கொண்டார். கேரள மாநிலம் வைக்கம் நகரில் உள்ள வைக்கம் நகரில் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதற்கான போராட்டத்திற்காக அனுப்பப்பட்டார். காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தின் முதல் வீரராக வினோபா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சென்ற நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளில் வினோபா பல முறை கைது செய்யப்பட்டார். சிறையில் படிப்பதும் எழுதுவதும் அவரது வேலையாக மாறியது. இஷாவாக்கிய விருத்தி, ஸ்திரப் ப்ரகிய தர்ஷன், ஸ்வராஜ்ய சாஸ்திரா  ஆகிய நூல்களை அவர் சிறையில் இருந்த போது எழுதினார். சிறையில் மற்ற கைதிகளுக்கு அவர் மராட்டி மொழியில் கீதையைப் பற்றி பேசியதின் தொகுப்பு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் புத்தகமாக பல்வேறு மொழிகளில் இன்று கிடைக்கிறது. கீதைக்கான சிறந்த உரைகளில் வினோபாவேயின் உரை முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தின் வேலூர் சிறையில் இருந்த காலத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றுக்கொண்டார். 

நாடு விடுதலையான பிறகு நேரடி அரசியலில் ஈடுபடாமல் சமுதாயப் பணிகளிலேயே வினோபா தொடர்ந்து செயல்பட்டார். இன்றய தெலுங்கானா மாநிலத்தில் அன்று கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாட்டாளர்கள் நிலச் சுவான்தார்களை கொன்று நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை அடக்க ராணுவமும் காவல்துறையும் களமிறங்கியது. இருவருக்கும் நடுவே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் வினோபா அந்தப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நிலமற்ற நாற்பது  தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை அவர் அங்கே உள்ள மக்களிடம் முன்வைத்தார். தனக்கு சொந்தமான நிலத்தில் நூறு ஏக்கர் நிலத்தை ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அந்த மக்களுக்கு அளிக்க முன்வந்தார். குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் போதும் எனவே எண்பது ஏக்கர்களை மட்டும் பெற்றுக் கொள்கிறோம் என்று அந்த ஹரிஜன சகோதர்கள் கூறினார்கள். இந்த சிறிய விதை பூதான இயக்கமாக உருவானது. 

நிலமற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றால் ஏறத்தாழ ஐந்து கோடி ஏக்கர் நிலம் வேண்டும் என்று கணக்கிடப்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று “நான் உங்கள் ஐந்தாவது மகன், எனக்கான பங்கைக் தாருங்கள்” என்று வினோபா கோரிக்கை வைத்தார். சராசரியாக ஒரு நாளுக்கு இருநூறில் இருந்து முன்னூறு ஏக்கர் நிலம் அவருக்கு அளிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கிய அவரது பாதயாத்திரை 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் நிறைவு பெற்றது. ஏறத்தாழ 40 லட்சம் ஏக்கர் நிலத்தை அவர் பெற்று மக்களுக்கு அளித்தார். தானமும் தர்மமும் பாரதநாட்டின் பிரிக்க முடியாத அம்சம் என்று வினோபா நிரூபித்தார். மீண்டும் 1965ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிஹார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களிடம் தற்சார்ப்பு பொருளாதாரம் பற்றிய ஆவலை உருவாக்கினார். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த கொள்ளைக்காரர்கள் பலர் வினோபாவின் அறிவுரையினை ஏற்று அரசிடம் சரணடைந்தார்கள். 

1970ஆம் ஆண்டு முதல் ஒரே இடத்தில் தங்கி ஆத்ம சாதனையை மேற்கொள்ளப் போவதாக வினோபா அறிவித்தார். 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு டிசம்பர் 25வரை ஓராண்டு பேசாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தது அதனை செயல்படுத்தினார். 

பாரத நாட்டு வரலாற்றில் அது ஒரு சோதனையான காலகட்டம். உயரிய விழுமியங்களை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி பதவியாசை கொண்டு விளங்கியது. லஞ்சமும், ஊழலும், வேலையில்லா திண்டாட்டமும் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. சர்வோதயா இயக்கத்தில் ஆச்சாரிய வினோபாவின் தளபதியாக விளங்கிய ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நாட்டின் ஜனநாய உரிமைகள் எல்லாவற்றையும் அவர் இல்லாமல் செய்தார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தளபதிகளாக செயல்பட்ட தலைவர்கள் அனைவரும் இதனை எதிர்த்தனர். ஆனால் எனோ வினோபா இந்திராவை ஆதரித்தார். மிகப் பெரும் மனிதர்களும் தவறிழைக்கும் நேரங்கள் உண்டு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல 

1982ஆம் ஆண்டு உணவருந்த மறுத்து சமண முறைப்படி உபவாசம் இருந்து நவம்பர் 15ஆம் தேதி ஆச்சாரிய வினோபா பாவே தனது உடலைத் துறந்தார். இறப்பிற்கு பிறகு அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது. 

இப்படிப்பட்ட மக்களையும் பாரதத் தாய் ஈன்றெடுத்துள்ளாள் என்பதையாவது நாம் அறிந்து கொள்வோம். 

(Visited 67 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close