புரட்சியாளர் விஷ்ணு குமார் பிங்கிலே நினைவுநாள் – நவம்பர் 16.
பாரத நாட்டின் விடுதலை என்பது கத்தியின்றி ரத்தமின்றி அடைந்ததல்ல. தன்னலம் கருதாத எண்ணற்ற வீரர்களின் தியாகத்தின் மீது கட்டமைக்கப்பட்டது அது. நாட்டின் விடுதலையை மனதில் கொண்டு உலகத்தின் பல பகுதிகளில் அதற்கான முன்னெடுப்பைச் செய்த தியாகிகள் பலர். ஆனால் இன்று அவர்களில் பலரை திட்டமிட்டு மறைத்து விட்டனர் சிலர். அப்படி பெருவாரியான மக்களால் அறியப்படாத விஷ்ணு குமார் பிங்கிலேவின் பலிதான நாள் இன்று.
பூனா நகரில் வசித்துவந்த ஒரு மஹாராஷ்டிர பிராமண குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தையாக 1888ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் விஷ்ணு குமார் பிங்கிலே. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வீர சாவர்க்கரால் கவரப்பட்டு தேசிய உணர்ச்சியில் ஊன்றியவர் அவர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மாஹிம் பகுதியில் நடைபெற்றுவந்த பயோனீர் அல்கலி ஒர்க்ஸ் என்ற தொழில்சாலையில் பணிக்கு சேர்ந்தார் அவர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு கோவிந்தராவ் போட்தார் என்பவர். தேசியவாதியாக அவர் வெடிகுண்டு தயாரிப்பில் விற்பன்னர். போட்தார் பிங்கிலேவை பல்வேறு புரட்சியாளர்களோடு அறிமுகம் செய்து வைத்தார், அதுபோக பிங்கிலேவிற்கு வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியையும் அளித்தார்.
பிங்கிலேவின் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்கத் தொடங்கியது. எனவே பிங்கிலே பாரத நாட்டை விட்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். அங்கே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் ( Mechanical Engineering ) படிக்க அனுமதி கிடைத்து இருந்தது. மிக ரகசியமாக இந்த தகவலை வைத்து இருந்த பிங்கிலே ரயில் பெட்டியில் ஏறுவதற்கு சற்று முன்னரே தனது அண்ணனிடம் தான் அமெரிக்கா செல்லும் தகவலைச் சொன்னார்.
அமெரிக்காவில் ஹிந்து, முஸ்லீம், சீக்கிய, பார்சி என்று பல்வேறு மதங்களைச் சார்ந்த புரட்சியாளர்கள் இணைந்து கதர் கட்சி என்ற அமைப்பை நடத்தி வந்தனர். கதர் என்ற உருது மொழி சொல்லின் பொருள் புரட்சி என்பதாகும். ஆயுதம் தாங்கிய போராட்டம் வழியே ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்பது அவர்கள் எண்ணம். பாய் பரமானத், சோஹன் சிங், பகவான் சிங், ஹர் தயாள், தாரகநாத் தாஸ், கர்த்தார் சிங், அப்துல் ஹஸிஸ் முஹம்மத் பரக்கத்துல்லா, ராஷ்பிஹாரி போஸ் ஆகியோர் அதில் முக்கியமான தலைவர்கள்.
முதலாம் உலகப் போர் தொடங்கிய நேரம் அது. பாரதம் முழுவதும் ஒரே நேரத்தில் போராட்டங்களை உருவாக்கி ஆங்கில ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஜெர்மனி துணை நிற்கும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு பிங்கிலே மீண்டும் தாயகம் திரும்பினார். ஏற்கனவே லோகமான்ய திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் ஆகியோர் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை தூண்டிவிட்டுக் கொண்டுதான் இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு பல்வேறு இளைஞர்கள் தயாராகி கொண்டுதான் இருந்தார்கள்.
கொல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த பிங்கிலே அங்கிருந்து பனாரஸ், லாகூர், அம்ரித்ஸர் ஆகிய நகரங்களில் உள்ள புரட்சியாளர்களோடு தொடர்பு கொண்டார். அன்றய பிரிட்டிஷ் ராணுவத்திலும் ஊடுருவிய புரட்சியாளர்கள் பல இடங்களில் உள்ள இந்திய சிப்பாய்களையும் தங்களுக்கு ஆதரவாக ஏற்கனவே மாற்றி வைத்து இருந்தனர். 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஆங்கில ஆட்சியை எதிர்த்து போராடத் துவங்கவேண்டும் என்பது திட்டம். ஆனால் இதற்கு நடுவே போராட்டக்காரர்களின் திட்டங்களை அரசு வேவு பார்க்கத் தொடங்கி இருந்தது. எனவே திட்டமிட்ட நாளுக்கு முன்னமே பல பகுதிகளில் இருந்த சிப்பாய்கள் ஆட்சியை எதிர்த்து போராடத் தொடங்கினார்கள். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதால் அரசு அந்த முயற்சியை முறியடித்து விட்டது. கதர் புரட்சி என்றும் முதலாம் லாகூர் சதிவழக்கு என்று இந்த முயற்சி வரலாற்றில் பதிவானது.
மொத்தம் 291 புரட்சியாளர்கள் மீது வழக்கு பதிவானது. இதில் 42 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 114 பேர் ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 93 பேர் பல்வேறு காலத்திற்கான தண்டனைக்கு உள்ளானார்கள்.
1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் விஷ்ணு குமார் பிங்கிலே லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஏழு மட்டுமே.
வீரர்களின் தியாகத்தை மனதில் வைப்போம். பெற்ற சுதந்திரத்தை கண் போல் காப்போம்.
இந்த புரட்சியில் முக்கியமானவர் கர்த்தர் சிங். அவர இறக்கும் போது வயது 19.. அவரை பற்றி மேலும் ஏதாவது தகவல்கள் இருந்தால் பதிவிடவும்..