- ”பெண்ணே ! ராமர், லக்ஷ்மணனுக்கு அடையாளம் காட்டியது கபந்தன் என்றால் நம் உடையவருக்கு அந்த ராமர் சீதையே வழி காண்பித்தார்கள் அந்தக் கதை தெரியுமா ?” என்றார் ஒரு சிஷ்யர். “அப்படியா ? சொல்லுங்கள் சாமி” என்றாள் அந்தப் பெண் ஆச்சரியப்பட்டு.
இது ராமாயண கதை என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.
சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு இலங்கைக்குச் சென்றுவிட்டான். ராமரும், லக்ஷ்மணனும் காட்டில் சீதையை தேடி அலைகிறார்கள். சீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கும் அங்கும் தேடிக்கொண்டு போகும்போது அங்கே ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. வழியில் ஒரு பெரிய அரக்கன் நின்றுகொண்டு இருக்கிறான்.
அந்த அரக்கனுக்குத் தலை இல்லை. அவன் வாய் வயிற்றிலிருந்தது. மார்பில் ஒரே கண். கால்கள் வயிற்றிலிருந்து தொங்கிக்கொண்டு, நீண்ட கைகள். வாய் உள்ளே சிகப்பாகப் பார்க்கப் பயங்கரமாக இருந்தது. மேலே பறக்கும் பறவைகளைப் பிடித்து அப்படியே விழுங்கிக்கொண்டு இருந்தான்.
அந்த அரக்கன் ராமர், லக்ஷ்மணர்களுக்கு வழிவிடாமல் தடுத்தான். ராமனும், லக்ஷ்மணனும் அந்த அரக்கனை அடித்து, இரண்டு கைகளையும் வெட்டித் தள்ளினார்கள். அந்த அரக்கன் வலியுடன் சத்தமாக “நீங்கள் யார்?” என்று கத்தினான். “நாங்கள் ராம, லக்ஷ்மணர்கள்” என்று சொன்னவுடன் அந்த அரக்கன் ஆனந்தப்பட்டன். எங்கள் பெயரைக் கேட்டவுடன் ஏன் உனக்கு ஆனந்தம் என்று ராமர் கேட்க உடனே அரக்கன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“என் பெயர் கபந்தன். ஒரு காலத்தில் நான் பேரழகனாக இருந்தேன். ஆனால் நான் விளையாட்டாகச் செய்த ஒரு செயல் என்னை இப்படி ஆக்கிவிட்டது” என்றான்.
”அப்படி என்ன செய்தாய் ? இப்படி ஆக ?” என்று ராம, லக்ஷ்மணர்கள் கேட்க அதற்கு அந்த அரக்கன் மேலும் தன் கதையைச் சொன்னான்.
ஒரு நாள் விளையாட்டாகக் கோரமான உருவத்தை எடுத்துக்கொண்டு ஒரு முனிவர் முன் சென்று அவரைப் பயமுறுத்தினேன். உடனே அந்த முனிவருக்குக் கோபம் வந்து “நீ எப்போது இப்படியே கோர உருவத்துடன் இருப்பாயாக” என்று சபித்துவிட்டார். நான் உடனே அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டும் என்றேன்.
முனிவர் இரக்கப்பட்டு சில காலம் நீ இப்படியே திரிந்துகொண்டு. பிறகு ராம, லக்ஷ்மணர்கள் உன் கையை வெட்டி உன்னை எரிப்பார்கள். அப்போது உனக்குப் பழைய உருவம் வரும் என்றார். அந்தச் சமயம் இப்போது வந்துவிட்டது என்று நினைக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது என்னை எரித்து என் பழைய உருவத்தை அடைய வழி செய்ய வேண்டும். என் உருவம் திரும்பி வந்தவுடன் சீதையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு வழி சொல்லுவேன் என்றான்.
ராம லக்ஷ்மணர்கள் கட்டைகளை அடுக்கி வைத்து அரக்கனை எரித்தார்கள். அரக்கனுக்குப் பழைய உருவம் வந்தது. பிறகு ராமனை பார்த்து, வாலி, சுக்ரீவன் இருவரும் அண்ணன் தம்பி. ஆனால் அவர்களுக்குள் சண்டை. வாலி சுக்ரீவனைத் துரத்திவிட்டான். சுக்ரீவன் வாலிக்குப் பயந்துகொண்டு ஒளிந்துகொண்டு இருக்கிறான். நீ அவனுடன் சிநேகம் கொண்டால் அவன் தன் குரங்குப் படையை அனுப்பி சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுவான்.
”சீதையைக் கண்டுபிடிக்கச் சுக்ரீவனை அடையாளம் கூறிய கபந்தன் செய்த உதவி போல நான் எந்த உதவியும் செய்யவில்லையே, அதனால் நான் ஊரைவிட்டுக் கிளம்புகிறேன்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
”பெண்ணே ! ராமர், லக்ஷ்மணனுக்கு அடையாளம் காட்டியது கபந்தன் என்றால் நம் உடையவருக்கு அந்த ராமர் சீதையே வழி காண்பித்தார்கள் அந்தக் கதை தெரியுமா ?” என்றார் ஒரு சிஷ்யர்.
“அப்படியா ? சொல்லுங்கள் சாமி” என்றாள் அந்தப் பெண் ஆச்சரியப்பட்டு.
அந்தச் சிஷ்யர் ”யாதவ பிரகாசர் என்ற இவரின் குரு இவரைக் கங்கையில் கொலை செய்யத் திட்டம் போட்டார். பக்கத்தில் நிற்கும் இந்தக் கோவிந்தன் தான் அவர்களின் சதித்திட்டத்தை ராமானுஜரிடம் சொன்னார். ராமானுஜர் அடர்ந்த காடு, இருள் வழி தெரியாமல் ஓடினார். களைத்துப் போய் ஒரு மரத்தின் அடியில் வந்து விழுந்தார். இனி என்னைப் பகவான் தான் காக்க வேண்டும் என்று மூர்ச்சையானார்.
அவர் காலை விழித்துக்கொண்டபோது ஒரு வேடனும், வேடுவச்சியும் அவரைக் காப்பாற்றி காஞ்சி வரை வழி காண்பித்துவிட்டு மறைந்தார்கள். வந்தவர்கள் காஞ்சி பேரருளாளனும் பெருந்தேவி தாயாரும்!” என்றபோது அந்தப் பெண்ணின் முகத்தில் பூரிப்பு தெரிந்தது.
ராமானுஜர் “பெண்ணே உனக்கு என் சிஷ்யன் சொன்ன விஷயம் மிக்க அந்தரங்கமானது” என்று மேற்கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் குட்டிப் பெண் அவரைப் பேசவிடாமல் ”அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே!” என்றாள்.
ராமானுஜருக்குக் கதை கேட்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.