தனி நபர் உரிமை மறுக்கப்பட்ட தேசம் –கியூபா :பகுதி 1 – ராமலிங்கம்
கியூபாவை ஆறு பாகங்களாக பிரித்து நண்பர் ராம லிங்கம் தனது முகநூலில் எழுதி இருந்தார். அவரது அனுமதியுடன் ஒரே இந்தியாவில் இதைப் பிரசரிக்கிறோம். நண்பர் ராம லிங்கத்தைப் பின் தொடர விரும்புபவர்கள் இந்த லிங்கில் சென்று பின்தொடரவும்.
https://www.facebook.com/kramalingam1981
“Cuba has too many doctors, so their main source of hard currency is to rent out medical services” என்கிறார் கியூபாவை சேர்ந்த பத்திரிகையாளர்.
2017 நிலவரப்படி, 1.12 கோடி மக்கள்தொகை கொண்ட கியூபா 90 ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கி தாம் மருத்துவ துறையில் பெரும் சாதனை நிகழ்த்தியதாக உலகில் பறைசாற்றிகொண்டிருந்த போது அங்கு மருத்துவர்களின் பொருளாதார நிலை தலைகீழாக இருந்தது. கியூபாவின் குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவம் இலவசம் என அரசு அறிவித்ததும் பெரும்பாலான மருத்துவர்களின் மாத வருமானம், படிப்பறிவற்ற டாக்ஸி ஓட்டுனர்களை விட குறைவான நிலைக்குத் தள்ளப்பட்டது. மருத்துவர்கள் தாம் படித்த படிப்பை விட்டு டாக்ஸி ஓட்டுனர்களானர்கள், சிலர் தாம் தங்கியிருந்த வீட்டை வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு சிறு அறைகளில் தங்கினார்கள்.
இக்கட்டான இவர்களின் நிலையறிந்து அரசு மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பை வெளிநாடுகளில் தேட ஆரம்பித்தது. கிட்டதட்ட 25 ஆயிரம் மருத்துவர்கள், 30 ஆயிரம் செவிலியர்கள் கொண்ட குழுவை 67 நாடுகளில் பணியமர்த்தி, இதன் மூலம் ஒரு மருத்துவர் ஒருவருக்கு 5000 அமெரிக்க டாலர் என்ற சேவை கட்டணத்தை கியூபா அரசு நேரடியாக அந்த நாட்டு அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதிலிருந்து மருத்துவருக்கு 1200 டாலர் மட்டுமே மாத ஊதியமாக கொடுத்து வருகிறது. அதாவது நான்கில் ஒரு பகுதியை அல்லது ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே உழைக்கும் மருத்துவருக்கு வழங்கி வருகிறது.
இவர்களில் 20 ஆயிரம் மருத்துவர்கள் பிரேசில் மற்றும் வெனிசுலாவின் கிராம புறங்களில் பணியமர்தப்பட்டிருகிறார்கள். காரணம் பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு மருத்துவர்கள், பெரும்பாலும் கிராமப்புறங்களில் தங்கி பணி செய்ய முன் வருவதில்லை.
அதனாலென்ன அரசு பெற்றுக் கொண்டு, மருத்துவருக்கு ஊதியமாக வழங்குகிறது. இதில் என்ன தவறு என கேட்கலாம். இந்தியா இப்படி செய்தால் கம்யுனிஸ்டுகள் என்ன சொல்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
உலகில் உள்ள ஜனநாயக நாடுகள் மற்ற நாடுகளிடம் ஒவ்வொரு பிரிவில் வேலைக்குத் தேர்ந்தெடுத்துப் போகும் போது, தங்கள் நாட்டு பிரஜைகளுக்குக் குறைந்த பட்சம் இந்த சம்பளத்திற்கு எடுப்பதாக இருந்தால் மட்டுமே அனுப்புகிறோம் என்று சொல்லிப் பார்த்திருக்கிறோம். அது தமது பிரஜைகள் அந்த நாட்டில் என்ன செலவாகும் எனத் தெரியாமல் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இப்படி எடுத்துப் பாருங்கள். இந்தியா அதிக அளவிற்கு பொறியாளர்களை உருவாக்கி உள்ளது. இந்தியாவிலிருந்து பொறியாளர் பணிகளுக்குப் போகிறவர்களுக்கு மட்டும் சம்பளத்தை அரசு பெற்றுக் கொண்டு உங்களுக்கு நான்கில் ஒரு பகுதியைத் தான் தருவோம் என்று சொன்னால் இங்குள்ள அறிவுஜீவிகளின் கேள்விகள் இப்படியெல்லாம் இருக்கும்.
- இந்தியா அளவுக்கு அதிகமாக பொறியாளர்களை தேவையில்லாமல் உருவாக்கி உள்ளது. அவர்களுக்கு உள்நாட்டில் வேலை கொடுக்க முடியவில்லையெனில் ஏன் இத்தனை பொறியாளர்களை உருவாக்குகிறீர்கள்?
- அரசுக்கு வேலை கொடுக்க வக்கில்லை. ஒருவன் சொந்த முயற்சியில் தனது திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கும் நாட்டிற்குச் செல்கிறான் . அவனிடம் நான்கில் ஒரு பகுதியைக் கொள்ளையடிக்கிறது இந்திய அரசு. உள்நாட்டில் வரி கட்டுபவனைக் காட்டிலும் தமது சொந்தங்களையும் பந்தங்களையும் விட்டுச் சென்றவனுக்கு அதிக வரியா? இது பாசிச அரசு என்று கதறுவார்களா? மாட்டார்களா?
- தனிநபர் என்ன வேண்டுமென்றாலும் பேச சுதந்திரம் வேண்டும் என்று சொல்லும் இடதுசாரி அறிவுஜீவிகள் , இடதுசாரிகள் ஆளும் நாடுகளில் தனி நபர் உரிமை கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளதை மறந்தும் பேச மாட்டார்கள்.
இப்போது கியூபாவைப் பற்றி பேச என்ன அவசியமுள்ளது என்று கேட்கலாம். காரணம், கடந்த சில நாட்களாக நம்ம ஊரு கம்யூனிஸ்ட்டுகள் கியூபாவை பற்றிய புகழ்ச்சி அதிகமாக இருக்கிறதே என்று கொஞ்சம் தேடினால், தோண்டத் தோண்ட பல பூதங்கள் வருகிறது. இதற்கே அப்படியா என்று கேட்காதீர்கள். அடுத்த பகுதியில் “அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சிப்பது கியூபாவின் சட்டப்படி குற்றம்” . பூதங்களின் கொடுங்கோன்மை பற்றி பார்க்கலாம்.
மிகவும் நல்ல கட்டுரை ! க்யூபா கற்பனை கதை சகிக்காமல் நானும் ஒரு பக்கம் எழுத்து வாட்சப்பில் அனுப்பினேன் . சிலர் சண்டைக்கு வந்தார்கள். நண்பர்களிடம் தேடி படிச்சு பாரு என்பதோடு நிறுத்திக் கொண்டேன்