தனி நபர் உரிமை மறுக்கப்பட்ட தேசம் – கியூபா : பகுதி -4 – ராமலிங்கம்
கட்டுரை எழுத்தாளர் – ராம லிங்கம் . சிங்கப்பூரில் மின்னியல் துறையில் பணியாற்றி வருகிறார்.
கியூபாவின் சாலைகளில் 50 ஆண்டுகளுக்கும் பழமையான வாகனங்களையே அதிகம் காண முடிகிறது. இதற்குக் காரணம், 1959 ஆம் ஆண்டு முதல் 2011 வரை குடிமக்கள் புதிய வாகனங்கள் வாங்கத் தடை செய்திருந்தது கியூபாவின் கம்யுனிஷ அரசு. 2012 இல் இந்தத் தடையைத் தளர்த்திக்கொண்ட போதும் மக்கள் பழைய கார்களை பழுது நீக்கியே இன்றளவும் பயன்படுத்துகின்றனர். வாகனப் பயன்படுத்தலுக்கு எந்த ஆயட்கால விதிமுறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனிமனித சுதந்திரம் என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அளிக்கப்படும் எல்லையற்ற சுதந்திரம் ஆட்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்து என்பது கம்யுனிஷ அரசின் நிலைப்பாடு. அதுவே உலகம் முழுவதும் கம்யுனிஷம் பின்பற்றிவரும் கொள்கை நிலைப்பாடும்!!!
இக்கொள்கை நிலைப்பாடுகளை கம்யுனிஷம் தளர்த்திக் கொள்ளவில்லையா என்று கேட்கலாம். இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கம்யுனிஷ சித்தாந்தம் உருவான காலத்தில் தேர்தலில் பங்கு கொள்ள மாட்டோம் என்று ஆரம்பத்தில் நிலைப்பாடுகளை எடுத்தாலும், பின்னர் வேறு வழியின்றி ஜன நாயக நாடுகளிலும் அரசியல் கட்சியாகத் தங்கள் கொள்கைகளைப் பரப்பி மத்தியில் மோடியைப் போல முழு அதிகாரத்துடன் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால், தேர்தல்கள் எல்லாம் வீண் என்கிற கோர முகத்தைக் காட்டலாம் என்பதே அவர்களின் நிலைப்பாடு. ஆனால் இந்திய ஜனநாயகத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சக்திகளாக இன்று கம்யுனிஸ்டுகள் இருப்பதற்குக் காரணம், ஜன நாயக நாட்டில் சுதந்திரம் இல்லையென்று சொல்லிக்கொண்டே கியூபாக்களை ஆதரிக்கும் நிலைப்பாடுகளும் மக்களின் விருப்பத்திற்கு மாறான அரசியலை முன்வைப்பதும் தான்!
ஆண்களின் உடையை பெண்கள் அணிவதும், பெண்களின் உடைகள் என வரையறை செய்யப்பட்ட உடைகளை ஆண்கள் அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இங்கு இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோரை புகைப்படம் எடுப்பது குற்றம். அரசு வெளியிடும் புகைப்படத்தை மட்டுமே பொதுமக்களும், ஊடகங்களும் பயன்படுத்த வேண்டும். உடைத்துச் சொல்லவேண்டுமென்றால், ஊடகங்களுக்கென தனி உரிமைகள் எல்லாம் இங்கு அனுமதியில்லை. ஜனநாயகத்திற்கு மூன்று தூண்களே போதுமானது. நான்காவதை அரசே தாங்கிக் கொள்ளும் என்பதே.
கியூபாவில் பண்டங்களை வாங்க, விற்கப் பயன்படுத்தப்படும் நாணயம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மக்கள் பயன்படுத்த கியூபன் பெசோவும், கியூபன் கன்வெர்டிபுல் என்ற பணத்தை வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது. அதாவது சுற்றுலா வருபவர்களின் தேவைக்காக மட்டும் என தனியாக ஒரு நாணயத்தையே பயன்பாட்டில் வைத்துள்ளது. கியூபன் கன்வெர்டிபுல் பணத்தின் மதிப்பு அமெரிக்கா டாலருக்கு இணையாக உள்ளது(1USD = 1CUC). கியூபன் பெசோவின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 26 பெசோ (1USD = 26 CUP). அதாவது கியூபா மக்கள் 1 பெசோவுக்கு வாங்கும் பொருள் சுற்றுலா செல்பவர்கள் 26 பெசோவுக்கு வாங்குவார்கள். வெளிநாட்டவர்கள் பெசோ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான விதிமுறைகளை மன்னர்கள் ஆட்சி செய்யும் மத்தியக் கிழக்கு நாடுகள் கூடப் பின்பற்றுவதில்லை.
கியூபாவின் அதிகபட்ச அந்நிய செலாவணி நான்கு வகைகளில் திரட்டப்படுகிறது. முதலாவதாக, இங்கு தயாரிக்கப்படும் சுருட்டுக்கள் உலக அளவில் பிரபலமானவை. இரண்டு, கியூபாவை உலகின் சர்க்கரை கிண்ணம் என்பர் இங்கு சர்க்கரை ஏற்றுமதி முக்கிய தொழில். மூன்றாவது, அந்நிய நாடுகளிலிருந்து தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்துகொண்டு அதற்கு விலையாக தம்மிடம் உள்ள அதிகபடியான மருத்துவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு மருத்துவ சேவைக்கு அனுப்புகிறார்கள். நான்காவது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலமும் பெரும் வருமானம் ஈட்டப்படுகிறது.
பிடல் காஸ்ட்ரோ தன்னை எதிர்த்தவர்களை என்ன செய்தார் என்பதையும், இறுதிக் காலக்கட்டங்களில் கம்யுனிஷம் கடைக்கு உதவாத சரக்கு என்பதையும் அவரது வார்த்தைகளில் அடுத்த பகுதியில் காணலாம்.