ஆன்மிகம்

பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!

”சாமி! மதுராவிற்கு வந்த கண்ணன் பட்டு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு கூனியின் சந்தனத்தைப் பூசிக்கொண்டு வாசனையுடன் நடந்தான். கழுத்தில் ஒரு பூ மாலை சூடிக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான்” என்று கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் குட்டிப் பெண்.

ஒருவரிடம் “பூக்காரரின் வீடு எங்கே ?” என்று விசாரித்தான். ”யாரு மாலாகாரரா ? இதோ அந்தக் குறுகிய சந்துக்குள்ளே இருக்கிறது” என்று ஒருவர் வழி காண்பிக்க அதில் நுழைந்தான் கண்ணன். ஒரு வீட்டு வாசலில் பூக்கள் கீழே சிந்தியிருக்க இது தான் மாலாகாரர் வீடு என்று கண்ணன் கண்டுபிடித்தான். வாசற் கதவைத் தட்டினான்.

உள்ளே மாலாகாரர் பூ வியாபாரம் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். இந்தச் நேரத்தில் யார் கதவைத் தட்டுகிறார்கள் என்று கதவைத் திறந்தார் . கண்ணன் இருப்பதைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றார் மாலாகாரர்.

”கண்ணா வைகுண்டத்திலிருந்து மதுராவிற்கு வந்தது ஆச்சரியம். மதுராவில் எவ்வளவோ இடம் இருக்க இந்தச் சின்ன சந்துக்குள் வந்தது இன்னொரு ஆச்சரியம். எவ்வளவோ பெரிய வீடுகள் இருக்க என்னுடைய சின்னக் குடிசைக்கு வந்தது அதைவிட ஆச்சரியம். வந்ததும் அல்லாமல் என் வீட்டுக் கதவைத் தட்டியது மிகப் பெரிய ஆச்சரியம் என்று அப்படியே கீழே விழுந்து கண்ணனின் பாதங்களைப் பற்றினார்.

”மாலாகரரே! உன் கையால் நான் புஷ்ப அலங்காரம் செய்துகொள்ள வேண்டும் என்று ஓடி வந்தேன்” என்றான் கண்ணன்.“என்னைத் தேடி வந்தாயா ? இந்தத் தெரு என்ன பாக்கியம் செய்தது! இந்த வீடு என்ன பாக்கியம் செய்தது ! நான் என்ன பாக்கியம் செய்தேன் என்று விதுரர் போல ஒரே பரபரப்பாக அங்கேயும் இங்கேயும் ஓடினார் மாலாகாரர்.

கீழே சிதறிக் கிடக்கும் புஷ்பங்களைக் கையில் எடுக்கிறார். காலியான குடையை கவிழ்த்தார். அதில் சில ஒரு ரோஜா, ஒரு முல்லை, ஒரு சென்பகப் பூ, ஒரு மல்லிகை கீழே விழுந்தது. மூலையில் சில வாடிய துளசி இருந்தது. அதைக் கொண்டு ஒரு குட்டி மாலை செய்தார். வழக்கமாகச் செய்யும் மாலைபோல இல்லாமல் பல வண்ணங்களில் இருந்தது.

”கண்ணா ! என்ன செய்வேன். இந்த மாதிரி மாலையை இதற்கு முன் செய்ததில்லை. என்ன செய்வேன். புஷ்பம் எல்லாம் தீர்ந்துவிட்டது” என்று புலம்பினார். அதற்குக் கண்ணன் “இந்த மாலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதைத் தேடித் தான் நான் உன் வீட்டுக் கதவைத் தட்டினேன். எனக்கு நீரே சூட்டி விடு” என்றான் கண்ணன்.

“இந்த மாலையைத் தேடிக் கொண்டா இவ்வளவு தூரம் வந்தாய்?” என்று கண்ணீருடன் மாலையைக் கண்ணுக்குச் சூட்டினார் மாலாகாரர். “மிகவும் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன்!” என்றான் கண்ணன்.

மாலாகாரர் ”கண்ணா! எதுவும் வேண்டாம். உன்னிடம் பக்தி குறையாமல் இருக்க வேண்டும்” என்றார்.“சாமி! இந்த மாதிரி தூய பக்தி கலந்த மலர்களைக் கண்ணனுக்குக் கொடுத்தேனா ? அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் “பெண்ணே நம்மாழ்வார் “துளசி, அலரி, வில்வம், முள் தாமரை, ஆம்பல் என்று எந்தப் பூவைப் பார்த்தாலும் இந்தப் பூக்கள் பெருமாளுக்கு என்று நெஞ்சம் நினைக்க வேண்டும். இல்லை என்றால் நமக்கு நெஞ்சமே இல்லை!. ’சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி’ பெருமாளுக்கு சம்பர்பிக்க வேண்டும்” என்றார்.

“ஆம் சாமி! நம்ம ஆண்டாள் ’தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது’ என்கிறாள்” என்றாள் அந்தப் பெண்.ராமானுஜர் “ஆண்டாள் சொல்லாது எதுவும் கிடையாது! பெண்ணே! இதுவரை விதுரர், கூனி, மாலாகாரர் பற்றிய கதைகளைச் சொன்னாய்.

விதுரர் கொடுத்தது ‘மடி தடவாத சோறு’ கூனி கொடுத்தது ‘சுண்ணாம்பு கலவாத சந்தனம்’ மாலாகாரர் கொடுத்தது ‘சுரு மாறாத பூக்கள்’ என்றார்.

”“சாமி புரியவில்லையே!” என்றாள் அந்தச் சின்னப் பெண்.ராமானுஜர் “ ‘மடி தடவாத சோறு’ – அதாவது சோறிடும் போதே அவன் மடியில் என்ன இருக்கிறது நமக்கு என்ன பயன் என்று எந்த எதிர்ப்பாப்பும் இல்லாமல் உணவு அளித்தார் விதுரர் கண்ணனுக்கு உணவு அளித்தார்.

’சுண்ணாம்பு கலவாத சந்தனம்’ – கூனி கண்ணனுக்குக் கொடுத்தது தூய்மையான சந்தனம். அவளும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. என்னையே சந்தனமாக எடுத்துக்கொள் என்றாள். சந்தனத்தில் சுண்ணாம்பு கலந்தால் தூய்மை கெட்டுவிடும். அதுபோலப் பக்தியும் இருக்க வேண்டும். ’சுரு மாறாத பூ’ – மாலாகாரர் கொடுத்தது

. பூக்களை நெருப்பின் பக்கம் எடுத்துச் சென்றால் இயற்கையான மணம் போய்க் கருகிய வாசனை வரும். நம் பக்தியும் இயற்கை மணம் உள்ளதாக இருக்க வேண்டும். மாலாகாரர் பக்தியுடன் கொடுத்தால் அந்தப் பூக்களுக்கு இயற்கையான மணம் இருந்தது! ” என்றார் ராமானுஜர்.

அப்போது பக்கத்திலிருந்த சீடர் ஒருவர் “கண்ணன் பூசிக்கொண்ட சந்தனம். அணிந்த பூமாலை போல நாம் பெருமாளுக்கு அடிமை செய்ய வேண்டும்” என்றார்.

உடனே அந்தப் பெண் “வழி அடிமை செய்தேனோ லட்சுமணனைப்போலே!” என்றார்.

(Visited 167 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close