இந்தியாசெய்திகள்

ரேபரேலி தொகுதியும் கை நழுவுகிறதா ?

2019- பாராளுமன்றத் தேர்தலில், அமேடி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தபோதிலும், வயநாடு தொகுதியில் ஜெயித்து பாராளுமன்றத்துக்குச் சென்றார். 2024- பாராளுமன்றத் தேர்தலில், அனேகமாக சோனியா காந்தியும் தென்னிந்தியாவில் ஏதாவது தொகுதிக்கு வரலாம்; காரணம், தற்போதைய சூழல், ரேபரலியில் மீண்டும் சோனியா ஜெயிப்பதற்குச் சாதகமாக இல்லையென்றே சொல்லலாம்.

ஆயிரம் பஸ் விவகாரத்தில், ப்ரியங்கா, ராகுல், சோனியா ஆகியோரை பாஜக மட்டுமின்றி, மாயாவதியும் செமத்தியாக கலாய்த்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், தற்போது சோனியா காந்தியின் பாராளுமன்றத் தொகுதியிலுள்ள, ரேபரலி சதர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் அதிதி ஷர்மாவும், காங்கிரஸை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறார். சந்தடி சாக்கில், ராஜஸ்தான் முதல்வர் (காங்கிரஸ்) அசோக் கெஹ்லோட்டையும் சாடியிருக்கிறார்.

2019-ல் அமேடியில் ராகுல்காந்தி தோல்வியடைந்ததன் காரணங்களைச் சொல்லவேண்டியதில்லை. 2014-ல் இதே ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி, அடுத்த ஐந்தாண்டுகளில் அதே தொகுதியில் கட்சியின் அடிமட்டத்தொண்டர்களை ஒருங்கிணைத்து, பல வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிவகுத்து, மக்களின் மனதில் இடம்பிடித்து, 2019-ல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தார் என்பதை நாமறிவோம்.

அமேதி ஒரு முன்னாள் சமஸ்தானமாகும். அந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவரான சஞ்சய் சிங், ஒரு காலத்தில் என்.டி.திவாரி தலைமையிலான உ.பி அரசிலும், பின்னாளில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அரசிலும் அமைச்சராக இருந்தவர் ஆவார். ஆனால், 2019 பாராளுமன்றத் தேர்தலின்போது, சஞ்சய் சிங் காங்கிரஸுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதோடு, பின்னாளில் பாஜகவில் இணைந்து கொண்டார். ராகுல் தோல்வியடைய, சஞ்சய் சிங் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு வாக்களித்ததே காரணமென்று சொல்லப்படுகிறது.

ரேபரேலியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
2017 உ.பி. சட்டமன்றத் தேர்தலில், ரேபரேலி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, ரேபரேலி சதர் தொகுதியில் அதிதி சிங் மற்றும் ஹர்சந்த்பூரில் ராகேஷ் சிங் ஆகிய இரு காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். தற்போது, இருவருமே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்- குறிப்பாக, பிரியங்கா காந்திக்கு எதிராக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை இருவரும் முன்வைத்து வருகின்றனர். சட்டவிரோதிகளுக்கு அளிக்கின்ற ஆதரவை, கட்சிக்காரர்களுக்கு தருவதில்லை பிரியங்கா என்று பேசி, தலைமையின் கடுங்கோபத்துக்கு ஆளானவர் ராகேஷ் சிங். தற்போது, அதிதி சிங், தன் பங்குக்கு, 1000 பஸ் விஷயத்தில், ப்ரியங்கா காந்தியை ட்விட்டரிலும், ஊடகங்களிலும் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

“உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியின் வசம் 1000 பேருந்துகள் இருக்குமானால், அவற்றை காங்கிரஸ் ஆளுகின்ற ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்ட்ரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு ஏன் அனுப்பவில்லை?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் அதிதி சிங்.
”அந்த மாநிலங்களிலும் பெருமளவு வசித்துவருகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து காங்கிரஸ் கட்சி ஏன் அக்கறைப்படவில்லை? உத்தரப் பிரதேசத்தின் எல்லையில் இந்தப் பேருந்துகளைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன?” ’இந்த நேரத்தில் இதுபோன்ற மலிவான அரசியல் அவசியம்தானா?’ என்று பிரியங்கா காந்திமீது வெகுண்டெழுந்திருக்கிறார் அதிதி சிங். 1000 பேருந்துகள் குறித்து அனுப்பிய தகவல்களில் இருந்த பொய்யான தகவல்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார் அதிதி சிங். ஒன்றுக்கும் பயன்படாத 297 பேருந்துகள், 98 ஆட்டோ ரிக்ஷாக்கள், தஸ்தாவேஜுகளே இல்லாத 68 வாகனங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியுள்ள அதிதி சிங், ‘இது என்ன குரூரமான விளையாட்டு?” என்று குமுறியிருக்கிறார்.

அதிதி சிங்கின் தந்தையான அகிலேஷ் சிங், ரேபரேலி சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றவர். மூன்று முறை காங்கிரஸ் சார்பாகவும், இரண்டு முறை சுயேச்சையாகவும் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 2017- சட்டசபைத் தேர்தலின்போது, உடல்நலக்குறைவு காரணமாக, லண்டனில் வசித்துவந்த மகள் அதிதி சிங்கை இந்தியாவுக்கு வரவழைத்து, காங்கிரஸ் சீட் வாங்கி, போட்டியிட வைத்தார். அதிதி சிங் சுமார் 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அந்தத் தேர்தலில், ரேபரேலி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், 3-ல் பாஜகவும், 2-ல் காங்கிரஸும் வெற்றி பெற்றன.

காஷ்மீர், சி.ஏ.ஏ. போன்ற விஷயங்களிலும் இவ்விருவரும் கட்சித்தலைமையின் முடிவுக்கு எதிராகப் பேசி வருகின்றனர். மொத்தத்தில், சோனியா காந்தியின் பாராளுமன்றத் தொகுதியில், கிடைத்த இரண்டே சட்டமன்ற உறுப்பினர்களும் தற்போது காங்கிரஸ் தலைமைக்கு ஆகாதவர்கள் ஆகிவிட்டார்கள்.

பஸ் விவகாரத்தில், ட்விட்டரில் கருத்துத் தெரிவித்ததோடு நிற்கவில்லை அதிதி சிங். பல ஊடகங்களுக்குத் தொடர்ந்து பேட்டியளித்து வரும் அவர், ‘ராஜஸ்தானிலுள்ள கோட்டாவில், ஆயிரக்கணக்கான உபியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தவித்தபோது, முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் என்ன செய்து கொண்டிருந்தார்? தற்போது உபி எல்லைக்கு வந்துள்ள ராஜஸ்தான் வாகனங்கள் அப்போது எங்கே போயிருந்தன? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் அதிதி சிங். தொடர்ந்து பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டும்கூட, ராஜஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்துவிட்டு, பிறகு உபி முதல்வர் யோகி அவர்களின் முயற்சியால் பேருந்துகள் அனுப்பப்பட்டு, அந்த மாணவ, மாணவியர் ராஜஸ்தானிலிருந்து உபிக்கு வரவழைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதற்காக, யோகி ஆதித்யநாத்ஜிக்கு அசோக் கெஹ்லோட் நன்றி தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே, அமேதியிலும் சரி, ரேபரேலியிலும் சரி, காங்கிரஸ் கட்சியின் வலிமைக்குக் காரணமாக இருந்தவர்கள் தற்போது தலைமைக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.
சோனியா காந்தி ரேபரேலியில் வெற்றிபெறக் காரணமே, அதிதி சிங் தொகுதியான ரேபரேலி சதரில் மட்டும் 1,23,000 வாக்குகள் முன்னிலை கிடைத்ததுதான். தற்போதைய சூழலில், காங்கிரஸ் மேலும் உபியில் பலவீனமடைந்திருக்கிற நிலையில், 2024-ல் சோனியா ரேபரேலியில் போட்டியிடுவது மிகவும் சந்தேகத்துக்குரியது என்று இந்தி ஊடகங்களில் உச்சுக்கொட்டத் தொடங்கி விட்டார்கள்.

அடப்பாவமே!

(Visited 121 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close