கழகக்கூடாரத்தில் கலவரம் – III
குறிப்பு: இந்தப் பதிவு, ஓரிரு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜகவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல குழுக்கள் மற்றும் அந்தக் குழுக்களில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடுவதற்கு முன்பு எழுதப்பட்டது
நோட்டாவோடு போட்டிபோடுகிற கட்சியென்று பெரிய கட்சிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் காளான்களைப் போல அவ்வப்போது முளைக்கின்ற சின்னஞ்சிறிய கட்சிகளாலும் பரிகசிக்கப்படுகிற தமிழக பாஜக-வின் தற்போதைய தலைவர், தமிழ்நாட்டிலேயே மிகவும் மூத்த, பணபலமும் படைபலமும் மிக்க தி.மு.கவுக்கே சவாலான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். இதை திமுக மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் உள்ளுக்குள் ஒப்புக்கொண்டாலும், வெளிப்படையாக அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
தமிழக பாஜக-வின் மாநிலத்தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டது, எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பு, தமிழக பாஜகவில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அறிய வேண்டியது மிக அவசியமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், எல்.முருகனை பாஜக மாநிலத் தலைவராக நியமித்தது, மத்திய தலைமை தமிழக பாஜக-விலுள்ள பெருந்தலைகளுக்குச் செய்த மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம்!
எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மத்திய தலைமை பரிசீலித்துக் கொண்டிருந்த பெயர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர், ‘எனது பெயரும் பட்டியலில் இருக்கிறது,’ என்றும் தம்பட்டமடித்துக் கொண்டிருந்தது தமிழக பாஜகவுக்கே உரித்தான வேடிக்கை. முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானாவின் ஆளுநர் பொறுப்பை ஏற்றுச்சென்றபின்னர், தமிழக பாஜகவில் நிகழ்ந்த குழப்பங்களைத் தொகுத்தால், ஒரு முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் எடுக்கலாம். இந்தக் காலகட்டத்தில் பி.டி.அரசகுமார், திமுகவுக்குத் தாவியதற்கு முன்னரும் பின்னரும் நடந்த நிகழ்வுகள், ‘இதையெல்லாம் மத்திய தலைமை கண்டும் காணாமலும் இருப்பதன் காரணமென்ன?’ என்ற ஆதங்கத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியது என்பதும் உண்மை.
கிட்டத்தட்ட 10 கட்சிப்பிரமுகர்களின் பெயர்கள் நாளடைவில் சுருங்கிச் சுருங்கி, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று ஒரு திகிலூட்டும் கதையைப் போல முடிவை நோக்கி நெருங்கியது. ஆனால், இறுதியில், மாதக்கணக்கில் பரவலாக ஊகிக்கப்பட்ட பெயர்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, திடீரென்று எல்.முருகனை தலைவராக மத்திய தலைமை அறிவித்தது. அதுவரை, மத்திய தலைமை மிக்சர் சாப்பிடுகிறதா என்று கேட்டுவந்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது – பாஜக மத்திய தலைமை ஒரே நியமனத்தின்மூலம் தமிழக பாஜகவிலிருந்த பலரது மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து மூலையில் குந்தவைத்து விட்டது.
சமூக வலைத்தளங்களில், மிகுந்த வலுவோடு வலம் வந்து கொண்டிருக்கின்ற பாஜக, தனக்கான ஆதரவைப் பெருக்க முடியாமலும், இருக்கிற ஆதரவை வாக்குகளாக மாற்ற முடியாமலும் தவித்து வந்திருக்கிறது. ஏனைய மாநிலங்களைப் போல இல்லாமல், மோடி எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியை மட்டுமே மையமாக வைத்து அரசியல் நடத்தப்படுகிற தமிழகத்தில், பாஜகவினரின் முயற்சிகள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டே வந்திருக்கின்றன. இந்த விஷயத்தைப் பொருத்தவரையில், தமிழக எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் பெருமளவு வெற்றி பெற்றிருப்பது கண்கூடு.
2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில், பாஜக மத்திய தலைமை அதை எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிடவும், அந்தப் பிரச்சாரத்தை முறியடிப்பதில் தமிழக பாஜக-வின் தோல்வியென்றே கருதியது. குறிப்பாக, வெற்றிவாய்ப்புகள் அதிகமிருப்பதாகக் கருதப்பட்ட, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் தோல்விகளை மத்திய தலைமையால் எளிதில் புறந்தள்ள முடியவில்லை. இதிலும் மிகக் குறிப்பாக, சிவகங்கையில் எச்.ராஜாவின் படுதோல்வி டெல்லிக்கு மிதமிஞ்சிய எரிச்சலையூட்டியதாகவே கூறப்படுகிறது. தமிழக பாஜக-வுக்கு எச்.ராஜா அவர்கள் தலைமையேற்க வேண்டுமென்று சமூகவலைத்தளங்களில் பரவலாக நடந்த பரப்புரையை, டெல்லி கண்டுகொள்ளாமல் விட்டதற்கு, சிவகங்கை தேர்தல் தோல்வியும் மிக முக்கியமான காரணம் ஆகும். அதற்கும் முன்பே, பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்களை, மாநிலத் தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே எச்.ராஜா அறிவித்தது, மாநிலத் தலைமைக்கு மட்டுமின்றி, மத்திய தலைமைக்கும் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் உண்மை.