ஆன்மிகம்

பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே !

எல்லோருக்கும் தெரிந்த ஆண்டாள் கதை தான் என்று ஆரம்பித்தாள் அந்தச் சுட்டிப் பெண்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் என்பவர் நந்தவனம் அமைத்துப் பெருமாளுக்குத் தினமும் பூமாலை தொடுத்து சேவை செய்து வந்தார். ஒரு நாள் அவர் நந்தவனத்தில் துளசிச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தார். அப்போது துளசிச் செடிகளுக்கு நடுவில் ஒரு சின்னக் குழந்தை சத்தம் கேட்டது.

செடிகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தபோது அங்கே அழகிய சிறு பெண் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தைக்குக் கோதை என்று பெயர் சூட்டினார். மிகுந்த பிரியத்துடன் வளர்த்தார். தினமும் கண்ணன் கதைகளை அவளுக்குச் சொன்னார்.

தானே யசோதை போலத் தாலாட்டுப் பாடி காண்பித்தார். கண்ணனுக்கு ஊட்டுவது போல நிலவு காட்டி சோறு ஊட்டினார். தன் இரண்டு கைகளைச் சேர்த்துச் சப்பாணி கொட்டியும், முதுகில் குழந்தையை வைத்து விளையாட்டுக் காட்டி, அப்பூச்சி காட்டி, காது குத்தல், நீராட்டுதல் என எதையும் விட்டுவைக்காமல் ஆண்டாளுக்கு சொன்னார். ஆண்டாளும் அந்தக் கதைகளை விரும்பிக் கண்கொட்டாமல் கேட்பாள்.

கண்ணன் எப்படி அப்பா வெண்ணெய் திருடுவான்?” என்று தினமும் கேட்பாள். பெரியாழ்வார் சளைக்காமல் தினமும் அந்தக் கதையைச் சொல்லுவார். தூங்கப் போவதற்கு முன் “அப்பா கண்ணன் காளிங்க நர்த்தன கதையைச் சொல்லு” என்பாள். இன்னொரு நாள் ”பூதணை பால் கொடுத்த கதை”, மற்றொருநாள் ”சகடாசுரன்” என்று இந்தக் கதைகளைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிடுவாள். மீண்டும் காலை எழுந்தவுடன் கண்ணனின் வேறு ஏதாவது லீலைகள் சொல்லச் சொல்லுவாள். எல்லா நேரமும் அவளுக்குக் கண்ணன் தான்!

தினமும் பெரியாழ்வார் பூ மாலை கட்டும்போது ஆண்டாளுக்குக் கண்ணன் கதைகளுடன் பூ மாலை கட்டவும் சொல்லிக்கொடுத்தார். வண்ண பூக்களை அவள் தான் தேர்ந்தெடுத்து இந்த நீலப் மலருக்கு அடுத்து இந்தச் சிகப்பு மலரைக் கட்டுங்கள் அப்பா என்பாள். பூக்களை அன்புடன் மாலையாகக் கட்டினாள். கண்ணன் மீது மாலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வாள்.

ஒரு நாள் இந்த மாலையைப் பெருமாள் அணிந்துகொண்டால் எப்படி இருக்கும் ? நன்றாக இருக்குமா ? என்று சந்தேகம் வந்தது. பெரியாழ்வார் கட்டி வைத்திருந்த மாலையை எடுத்துக்கொண்டு பின்புறம் இருக்கும் கிணற்றடிக்குச் சென்றாள். பெருமாளின் மாலையைத் தான் அணிந்துகொண்டு தண்ணீரில் தெரியும் பிரதிபலிப்பில் பார்த்துத் திருப்தி அடைந்தாள். பிறகு மாலையைப் பெரியாழ்வார் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் கூடையில் வைத்துவிட்டாள்.

தினமும் பெரியாழ்வார் மாலையைக் கட்ட, ஆண்டாள் அதை அணிந்துகொண்டு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொண்டாள். ஒரு நாள் தற்செயலாக ஆண்டாள் மாலை அணிந்து அழகு பார்ப்பதை பெரியாழ்வார் பார்த்துவிட்டார்.

“கோதை ! இப்படி பெருமாளுக்கு வைத்த மாலையை நீ அணிந்துகொள்ளலாமா ? இது தவறு இல்லையா ?” என்று கோபித்துக்கொண்டார்.

அன்று கோதை அணிந்த மாலை, சுத்தம் இல்லாத மாலை என்று அதைத் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் நந்தவனம் சென்று பூக்களை பறித்து, வேறு ஒரு மாலை கட்டி அதைப் பெருமாளுக்கு எடுத்துச் சென்றார்.

அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி “நீர் இன்று நமக்குச் சூட்டிய மாலை சரியில்லையே ! தினமும் வரும் மாலை மாதிரி உகப்பாக இல்லையே ? ” என்று விசாரித்தார். ஆழ்வாரும் நடந்ததைக் கூறினார். “கோதை சூடி கொடுத்த மாலையே எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் அவள் சூடிக் கொடுத்த மாலையையே எடுத்து வாரும்” என்று சொன்னார்.

பெரியாழ்வார் கோதையை நினைத்து ஆச்சரியப்பட்டார். பெருமாளிடம் அவள் வைத்திருக்கும் தூய அன்பை எண்ணி சந்தோஷப்பட்டார். அதன் பிறகு கோதை சூடிக் களைந்த மாலையை தினமும் எடுத்துச் சென்றார்.

கோதைக்கு வளர வளர அவளுக்குக் கண்ணன் மீது பக்தியுடன் காதலும் வந்தது. அவள் தன் தோழிகளை எல்லாம் அழைத்து கோபியர் போல நினைத்துக்கொண்டு, ஸ்ரீவில்லிப்புத்தூரையே ஆயர்பாடியாக நினைத்து அங்கே உள்ள கோயிலையே நந்தகோபன் மாளிகையாக எண்ணி மார்கழி மாதம் நோன்பு நோற்று, திருப்பாவை பாடினாள்.

அதன் பிறகு காதல் அதிகமாகி, நாச்சியார் திருமொழி பாடினாள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பெரியாழ்வார் “பெண்ணே நீ யாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய்” என்று கேட்டார். அதற்கு ஆண்டாள் “நான் கண்ணனையே விரும்புகிறேன் அவனே என்னுடைய கணவன்” என்று சொல்லிவிட்டாள். பெரியாழ்வார் எல்லா திவ்ய தேச பெருமாளைப் பற்றி அவர்களுடைய பெருமையைக் கூறிக்கொண்டு வந்தார். அப்படி சொல்லுக்கொண்டு வரும் போது திருவரங்கம் பெருமாள் பற்றி சொன்னவுடன் “இவரையே நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள்.

அன்று இரவு திருவரங்கன் பெரியாழ்வார் கனவில் தோன்றி “உம் பெண் கோதை, என்னை ஆண்டாள், அவளை அழைத்துக் கொண்டு திருவரங்கம் வாரும்” என்றார்.

பெரியாழ்வார் பேரானந்தத்துடன் பல்லக்கில் மாலை மரியாதையுடன் ஆண்டாளை திருவரங்கம் அழைத்துச் சென்றார். திருக்கோயிலின் கருவறை வந்தவுடன் ஆண்டாள் பெருமாளிடம் அவள் விருப்படியே சேர்ந்தாள். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.

“சாமி, ஐந்து வயதிலேயே ஆண்டாள் கண்ணனிடம் காதல் கொண்டு திருப்பாவை பாடினாள், கோதை பிறந்த ஊரே கோவிந்தன் வாழும் ஊர் ஆயிற்றே! அவளைப் போல நான் பக்தியில் பழுக்கவில்லையே! அதனால் நான் கிளம்புகிறேன்” என்றாள்.

அப்போது சிஷ்யர்களில் ஒருவர் “பெண்ணே ஆண்டாளுக்கு அண்ணன் ஒருவர் இருக்கிறார் அந்த கதை தெரியுமா ?” என்றார். ”அண்ணனா ? அப்படி நான் கேள்விப்பட்டதில்லையே !” என்றாள் வியப்புடன்.

“ஆண்டாள் நாச்சியாா் ‘கள்ளழகர் பெருமாளுக்கு நூறு தடா வெண்ணை, அக்கார அடிசல் சமர்பிக்கிறதாக பாடினாள். அவள் பாடியதற்கேற்ப நம் உடையவர் அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றபோது ஆண்டாள் நம் ராமானுஜரை “வாரும் அண்ணலே !” என்று அழைத்தார்.

அதனால் இவரே நம் ஆண்டாளுக்கு அண்ணன். கோயில் அண்ணன்!
அந்த குட்டிப் பெண் கண்கலங்கி “ராமானுஜ மாமுனிகள் வாழியே! மாமுனிக்குப் பின்னானாள் ஆண்டாள் வாழியே!” என்றாள்.

உடையவர் “பெண்ணே! ஆண்டாள் பக்தியில் திளைத்ததில் வியப்பில்லையே! ஆழ்வார்களிலேயே பெரியவர் என்று போற்றப்படும் பெரியாழ்வார் அவளுடைய தந்தை. ஆண்டாளே ‘பட்டர் பிரான் கோதை’ என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறாள்.

தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல…” என்று சொல்லுவதற்குள்
“எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!” என்று சடைக்கென்று சொல்ல ராமானுஜரும் அவர்களுடைய சீடர்களும் வியந்து நின்றார்கள்.

(Visited 278 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close