திமுக முன்னாள் அமைச்சா் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் , 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீா்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை அடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பா் மாதம் 8ம் தேதி முதல் அக்டோபா் 8ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் உள்ள 8 கணக்குகளில் இருந்து வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை திமுக முன்னாள் அமைச்சா் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன்அனுப்பியுள்ளாா்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் இப்பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவினா் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி, குற்றம் சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து இன்று தீா்ப்பளித்தாா். அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றம் உத்தரவிட்டாா்.