இக்கரைக்கே சென்றேனோ விபீஷணரைப் போலே
“சாமி! இது விபீஷணனின் கதை” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தச் சுட்டிப் பெண்.சீதையை இலங்கையில் அசோகவனம் என்ற இடத்தில் சிறை வைத்தான் ராவணன். சுக்ரீவ மஹாராஜ தலைமையில் வானரப் படைகள் ராவணனுடன் சண்டை போடக் கடற்கரையில் தயாராகக் கூடின. அதே சமயத்தில் ராவணன் இலங்கையில் தன் மந்திரிகளுடன் ஆலோசனை செய்துக்கொண்டு இருந்தான்…
விபீஷணன் “அண்ணா ! சீதையை நீங்கள் அபகரித்து வந்தது தவறு. ராமரிடமே ஒப்படைத்துவிடுங்கள்” என்று அறிவுரை கூறினான்.ராவணனுக்கு பயங்கரக் கோபம் வந்தது “நீ என் தம்பியா ? நம் குலத்தைக் கெடுக்க வந்தவனே” என்று திட்டிவிட்டு “நீ என் தம்பியாகப் பிறந்துவிட்டாய் அதனால் உன்னைச் சும்மா விடுகிறேன்! பிழைத்துப் போ!” என்றான்.

விபீஷணன் யோசித்தான். ராமரிடம் சரணடைவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வந்தான். யோசிக்கவே இல்லை உடனே துணைக்குப் பக்கத்திலிருந்த நான்கு பேரை அழைத்துக்கொண்டான். ஆகாசத்தில் பறந்தான். ராம, லக்ஷ்மணர்கள் இருக்கும் கடற்கரைக்கு வந்தான்.
நான் ராவணனின் தம்பி விபீஷணன். சீதையை விடச் சொல்லி என் அண்ணனுக்கு அறிவுரை கூறினேன். அவன் கேட்கவில்லை. என்னை அவமானப் படுத்திவிட்டான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே ராமரிடம் சரணடைய வந்துள்ளேன்” என்றான்.”எதை எல்லாம் விட்டுவிட்டு வந்தான் ?” என்று ஒரு குரங்கு யோசித்தது. இது விபீஷணன் காதில் விழுந்திருக்க வேண்டும்
”ராமா! என் நாட்டை விட்டேன். என் அரண்மனையை விட்டேன். என் மனைவியை விட்டேன். என் குழந்தைகளை விட்டேன். என் நண்பர்களை விட்டேன். எனக்கு இப்போது எதுவும் சொந்தம் இல்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வந்துள்ளேன்! நீ அடைக்கலம் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்றான்.
ராமர் கூட இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்.சுக்ரீவன், லக்ஷ்மணன் முதலானோர்கள் “ராவணனின் ஒற்றனாக இருக்கக்கூடும். அதனால் ஏற்றுக்கொள்ளக் கூடாது!” என்றார்கள். அனுமார் “இலங்கையில் விபீஷணனை பார்த்திருக்கிறேன். நல்லவன். ஏற்றுக்கொள்ளலாம்” என்றார்.
ராமர் சொன்னார் “நல்லவனோ, கெட்டவனோ. என்னை நம்பி அடைக்கலம் என்று வந்துவிட்டான். அதனால் அவனை ஏற்றுக்கொள்கிறேன். ராவணன் வந்திருந்தாலும் ஏற்றுக்கொண்டிருப்பேன்!” என்று தன் முடிவைச் சொன்னார்.
சுக்ரீவன் விபீஷணனை ராமரிடம் அழைத்து வந்தான். விபீஷணன் அப்படியே ராமரின் கால்களில் விழுந்தான் “ராமா! எல்லாவற்றையும் விட்டுவிட்டு உனக்குத் தொண்டு செய்ய வந்தேன். இனி அதுவே எனக்கு இன்பம்” என்றான்.
ராமர் “விபீஷணா உன்னை இவ்வளவு நேரம் காக்க வைத்ததற்கு நீ என்னை மன்னிக்க வேண்டும்!” என்றார். உடனே ராமர் லக்ஷ்மணரைக் கூப்பிட்டு அந்த இடத்திலேயே விபீஷணனுக்கு இலங்கைக்கு அரசனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
“விபீஷணா ! என் தந்தை தசரதனுக்கு நான்கு பிள்ளைகள். வரும் வழியில் குகனைப் பார்த்தோம். அவன் ஒரு தம்பியானான். அதற்குப் பிறகு சுக்ரீவனைப் பார்த்தோம். அவன் இன்னொரு தம்பியானான். இப்போது நீயும் எனக்கு ஒரு தம்பி. மொத்தம் நாம் ஏழு பேர்!” என்றார்.
விபீஷணன் புல்லரித்துப் போனான் “ராமா ! இந்த வானர சேனையில் நானும் கடைசித் தொண்டன். உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான்.”சாமி ! நான் விபீஷணன் போல எல்லாவற்றையும் துறந்து ராமரின் காலில் விழுந்தேனா ? அதனால் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.
அப்போது ஒரு சிஷ்யர் “ஒரு சந்தேகம்! பொதுவாக இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போவோம். ஆனால் விபீஷணன் இலங்கையின் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வருகிறானே!” என்றார்.
ராமானுஜர் சிரித்துக்கொண்டு “இதற்குப் பெரியாழ்வார் தான் பதில் சொல்ல வேண்டும்!” என்றார். குட்டிப் பெண்ணுக்குப் புரியவில்லை “சாமி! விளக்கமாகச் சொல்லுங்களேன்!” என்றாள்.
பெரியாழ்வார் ’அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்’ என்கிறார். அதாவது சம்சார கடலில் தவித்துக்கொண்டு இருக்கும் அக்கரையில் இருப்போரை அவன் அருளால் இக்கரையில் ( பெருமாள் இருக்கும் கரைக்கு ) ஏற்றிப் பயப்படாதே நான் இருக்கிறேன் என்று பெருமாள் நமக்குக் கூறுகிறார்” என்றார்“மிக அருமையாகச் சொன்னீர்கள் சாமி!” என்றாள்
அந்தக் குட்டிப் பெண்இன்னொரு சிஷ்யர் “ஆழ்வார்கள் விபீஷணனைப் பாடியுள்ளார்கள். ஆனால் கர்ணனைப் பாடவில்லையே ?” என்றார்
ராமானுஜர் புன்முறுவலோடு ”விபீஷணன் விட வேண்டிய சமயத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெற்றிப்பெற்றான். ஆனால் கர்ணன் விடவேண்டிய சமயத்தில் எல்லாவற்றையும் தானம் செய்தான். ஆனால் செஞ்சோற்றுக் கடன், நேர்மை, நியாயம் என்று பெருமாள் முன் அதை எல்லாம் விடாமல் பேசிக்கொண்டு இருந்தான்.
பெருமாளைக் காட்டிலும் நேர்மை இல்லை. அவரைக் காட்டிலும் தர்மம் இல்லை. அவரைக் காட்டிலும் இனிமை இல்லை!” என்றார்.
உடனே அந்தச் சின்னப் பெண் “இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே!” என்றார்” .
உண்ண உண்ணத் திகட்டாதது ராமாயணம்” என்றார் ராமானுஜர் !