அடி வாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே!
”சாமி! இது கொங்குப் பிராட்டி என்ற ராமானுஜரின் சிஷ்யைப் பற்றிய கதை” என்று அந்தக் குட்டிப் பெண் சொல்ல ஆரம்பித்தவுடன். ராமானுஜர் புன்முறுவலுடன் கேட்க ஆரம்பித்தார்.
ராமானுஜர் திருவரங்கத்தில் வைணவ பீடத்தை அலங்கரித்தார். அந்தச் சமயம் ஒரு தீவிர சைவனான சோழ மன்னன் வைணவர்களுக்குப் பல வழிகளில் தொல்லைக் கொடுத்தான். எப்படியாவது தங்கள் குரு ராமானுஜரையும், வைணவத்தையும் காப்பதற்காக அவருடைய சிஷ்யர்களில் முக்கியமானவரான கூரத்தாழ்வான் ராமானுஜரின் திரிதண்டம், காஷாயங்களை தாம் தரித்துக்கொண்டு ராமானுஜர் மாதிரி சந்நியாசி வேஷம் போட்டுக்கொண்டார்.
ராமானுஜருக்குத் தான் உடுத்தியிருந்த வெள்ளை உடையைக் கொடுத்து மேலைநாட்டுக்குத் தப்பிவிடும்படி வேண்டினார்கள்.
ராமானுஜரும் சில அந்தரங்க சீடர்களும் மேலைநாட்டுக்குப் புறப்பட்டார்கள். கூரத்தழ்வானும், பெரியநம்பிகளையும் சோழ அரசன் பிடித்துக்கொண்டு போனான்.

ராமானுஜரின் புன்முறுவல் மறைந்து, கண்களில் கண்ணீர் வழிந்தது “சாமி நீங்க ஏன் கண்கலங்குகிறீர்கள் ? அந்தச் சோழ அரசன் தான் இப்போது இல்லை கவலைப்பட வேண்டாம்!” என்றாள் அந்தப் பெண்.
ராமானுஜர் “ஆம் குழந்தாய்! அந்தச் சோழ அரசன் இல்லை. அவனால் பெரிய நம்பிகளும் இல்லை, கூரத்தாழ்வானுக்கும் கண் இல்லாமல் போய்விட்டதே!” என்றார்.
“சாமி ! உங்களுக்கும் அந்தக் கதை தெரியுமா ? “ என்றாள்.
ராமானுஜர் பேச முடியாமல், தலை அசைக்க அந்தப் பெண் தொடர்ந்தாள். ராமானுஜர் மேலைநாட்டுக்குப் போகும் வழியில் கூரத்தாழ்வானுக்கும், பெரிய நம்பிக்கும் என்ன ஆனதோ என்று மனம் கலங்கினார்.
அரங்கனே துணையாக இருக்கட்டும் என்று நடந்தார். ஏழு நாட்கள் உணவு ஏதும் இல்லாமல் கொங்கு நாட்டில் நீலகிரித் தொடரைச் சிஷ்யர்களுடன் வந்தடைந்தார். மாலை இருட்டு சூழ்ந்துகொண்டது நல்ல மழை வேறு.

தூரத்தில் சற்று வெளிச்சம் தெரியச் சீடர்கள் அதை நோக்கி வழி கேட்க ஓடினார்கள். விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் வழி கேட்டார்கள். சீடர்களைப் பார்த்த வேடுவர்கள் “நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் ?”என்று கேட்கத் ”திருவரங்கத்திலிருந்து வருகிறோம்” என்றார்கள். உடனே வேடுவர்கள் கைகூப்பி “அங்கு எம்பெருமானார் நலமா ?” என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று “எம்பெருமானாரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?” என்றார்கள்.
அதற்கு வேடுவரின் தலைவன் “நாங்கள் நல்லான் சீடர்கள். எங்களுக்கு நல்லான் ராமானுஜரின் பிரபாவத்தைச் சொல்லியிருக்கிறார்.
‘உய்ய ஒரே வழி உடையவர் திருவடி!” என்று உபதேசம் செய்தார் என்றார்கள். வியப்புற்ற சீடர்கள் “இவர் தான் எம்பெருமானார்” என்று பக்கத்தில் இருந்த ராமானுஜரைக் காட்ட அவர்கள் விழுந்து எம்பெருமானாரின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டார்கள்.
அன்று இரவு வேடுவர்கள் ராமானுஜருக்குத் தேனும் தினை மாவும் உணவாகக் கொடுத்தார்கள். மறுநாள் வேடர்கள் ராமானுஜரையும் அவருடைய சீடர்களையும் அழைத்துச் சென்று மலை மேலே இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் “கட்டளை வாரி” என்ற பிராமணன் இல்லத்துக்கு அனுப்பி “சீக்கிரம் இவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டிய பொருள்களையும் கொடுத்தனுப்பினான்.
அப்போது அந்த இல்லத்தில் ‘கட்டளை வாரி’ என்ற பிராமணன் இல்லை. அவன் மனைவி மட்டுமே இருந்தாள். அவள் அந்தச் சீடர்களை வரவேற்று “உணவு அருந்த வேண்டும் ” என்று வேண்டிக்கொண்டாள்.
சீடர்களும் ராமானுஜரும் “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்து “வேண்டாம்” என்றார்கள். அந்தப் பெண் “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் ? இந்த உணவில் சந்தேகம் ஏதும் வேண்டாம். நான் எம்பெருமானார் சிஷ்யை” என்று அதிர்வைக் கொடுத்தாள்.
”எம்பெருமானார் சிஷ்யை ஆனது எப்படி ?” என்று சீடர்கள் முழிக்க அந்தப் பெண் பழைய கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். என் பெயர் சுமதி. நான் கொங்கு தேசத்தைச் சேர்ந்தவள். ஒரு சமயம் இங்கே மழை இல்லாமல் பஞ்சம் வந்தது
. நானும் என் கணவரும் பிழைப்பை நாடி திருவரங்கம் சென்றோம். அங்கே சில காலம் வசித்தோம். அங்குத் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். தினமும் ஒரு சந்நியாசி மாதுகரம்(பிக்ஷை) செய்ய ஏழு வீட்டுக்குச் செல்வார். அவர்கள் வழங்கும் அன்னத்தை தன் மேலாடையில் வாங்கிக்கொள்வார்.
அந்த உணவில் ஏதாவது உப்பு, புளி, காரம் ஒட்டிக்கொண்டிருந்தால் ? அதனால் நேராகக் காவிரிக்குச் சென்று அந்த உணவை அலசுவார். பிறகு அதை எடுத்துக்கொள்வார். எனக்கு ஒரே வியப்பு. இந்த மாதிரி ஒரு சந்நியாசியை ஊர் பிரபுக்களும், செல்வந்தர்களும் விழுந்து விழுந்து வணங்குவார்களே என்று.
ஒருநாள் மாதுகரம் செய்ய வரும்போது அவரைத் தடுத்து நிறுத்தினேன். எம்பெருமானார் கோபப்படவில்லை “பெண்ணே! ஏன் என்னைத் தடுத்து நிறுத்துகிறாய் ? ” என்று கேட்டார். அதற்கு நான் “மகாராஜாக்களும், பிரபுக்களும் உங்கள் திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்கள் ஆனால் நீரோ மாதுகரம் செய்கிறீர் அவர்களிடம் இல்லாதது உங்களிடம் ஏதோ இருக்கிறது அது என்ன ?” என்று கேட்டேன்.
அதற்கு அவர் புன்முறுவல் கொண்டு “நாம் அவர்களுக்குப் பகவத்விஷயத்தில் சில நல்லவார்த்தைகள் சொல்லுவதால்” என்றார் “அந்த நல்ல வார்த்தைகளை எனக்கும் சொல்லக்கூடாதா ?” என்று கேட்டேன் அவரும் மடத்துக்கு வா சொல்லுகிறேன் என்றார். அன்று மடத்துக்குச் சென்றேன்.
எனக்குப் பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்து என் காதில் சில மந்திரங்களை ஓதினார். நானும் கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன். சில காலம் கழித்து கொங்கு தேசத்தில் மீண்டும் மழை பொழிந்து பஞ்சம் போனது. திருவரங்கத்திலிருந்து ஊருக்குப் புறப்படும்போது அவர் எனக்குக் காதில் சொன்ன வார்த்தையை மறந்துபோனேன்.
மீண்டும் மடத்துக்குச் சென்று அவரை வணங்கி “சாமி ! முன்பு நீங்கள் எனக்குச் சொன்ன நல்வார்த்தையை நான் மறந்துபோனேன். அதை என் நெஞ்சிலே நிலைக்கும்படி மறுபடி நீங்கள் மிண்டும் சொல்ல வேண்டும் என்றேன்”

அவரும் கோபம் கொள்ளாமல் முதலில் எப்படிச் சொன்னாரோ அதே போல மீண்டும் ஒரு முறை என் நெஞ்சிலே நிலைக்கும்படி உபதேசித்தார். அவரை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் புறப்படும் முன் ”ஸ்வாமி! எனக்கு உங்கள் நினைவாக ஏதேனும் ஒன்றைத் தந்தருள வேண்டும்” என்று கேட்டேன். எம்பெருமானாரின் கருணையை என்ன என்று சொல்வேன்.
தாம் தரித்திருந்த திருவடி ஜோடியைக் கழற்றி எனக்குக் கொடுத்தார். அவர் உபதேசங்களுடன், அவருடைய திருவடியுடன் இங்கு வந்து சேர்ந்தோம். பிறகு மழைக்குக் குறைவில்லை. வாழ்வு வளம் பெற்றது. அதனால் நீங்கள் எல்லோரும் பயப்படாமல் இங்கேயே உணவு அருந்தலாம்” என்றாள்.
சீடர்களுடன் உடையவர் வெள்ளை சாத்திக்கொண்டு, இருட்டும் சூழ்ந்திருந்ததால் அவளுக்கு ராமானுஜரை அடையாளாம் தெரியவில்லை. உடையவர் அவள் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து அமுது உண்ணச் சம்மதித்தார். தம் சீடர் ஒருவரை அவள் செய்யும் காரியங்களைக் கண்காணிக்கும்படி சொன்னார்.
சீடரும் அதைக் கவனித்து அதை ராமானுஜரிடம் வந்து சொன்னார். அவர் சொன்ன விஷயம் ”அந்தப் பெண் குளித்துவிட்டு, சுத்தமான உடை அணிந்துகொண்டு சமையலறை சென்று “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று கூறி உணவு சமைக்க ஆரம்பித்தாள். செய்து முடித்தபின்.
கதவைச் சாத்திக்கொண்டு எம்பெருமானார் திருவடிகளுக்குத் அபிஷேகம் செய்து, பெருமாளுக்கு அளிப்பது போலத் திருவடிகளுக்கு உணவைக் காண்பித்துவிட்டு, வெளியே வந்து “வாருங்கள் எல்லோரும் ராமானுஜரின் பிரசாதத்தை அமுது செய்யலாம்” என்றாள்.
உடையவர் அந்தப் பெண்ணைப் பார்த்து “உள்ளே கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்தாய் ?” என்று கேட்க அதற்கு அவள் “எம்பெருமானார் திருவடிகளுக்கு அமுது அளித்தேன்” என்றாள். “அவற்றைக் காட்டு” என்றார் உடையவர். அவளும் அந்தத் திருவடி நிலைகளைத் தன் தலையில் சுமந்துகொண்டு வந்தாள். அதைப் பார்த்த ராமானுஜர் தமது என்று அறிந்துகொண்டார்.
அந்தப் பெண்ணைப் பார்த்து “ராமானுஜரிடம் நீ உபதேசம் பெற்றது உண்மையாகில் எங்களில் யாராவது ராமானுஜர் போலிருக்கிறாரா ?” என்று கேட்டார் அப்போது நன்றாக இருட்டியிருந்தது.
யார் முகமும் சரியாகத் தெரியவில்லை. அந்தப் பெண் விளக்கு ஒன்றை ஏற்றிவந்து ஒவ்வொரு திருவடிகளாகப் பார்த்துக்கொண்டு வந்தாள். ராமானுசர் முன்பு வந்ததும் நின்று ஊன்றிக் கவனித்து அவர் திருவடிகளைக் கண்டதும் திகைத்து அது ராமானுஜரின் திருவடி என்று அறிந்துகொண்டு அப்படியே கீழே விழுந்து கண்ணீரால் அதை நனைத்தாள். மீண்டும் மீண்டும் வணங்கினாள்.
“திரிதண்டமும், காஷாயமும் இல்லாததால் தெரியவில்லை என்று அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றிய உடையவர் அவளுக்கு நல்லாசி வழங்கிப் பின் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
“சாமி! நான் கொங்கில் பிராட்டிப் போல் ராமானுஜரைப் பற்றினேனா ? அல்லது அவர் அடிநிலையே ( பாதுகை) தஞ்சம் என்று இருந்தேனா ? அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள். ராமானுஜரும் சீடர்களும் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார்கள்.
“சாமி எல்லோரும் ஏதோ யோசிக்கிறீர்களே ?” என்றாள் அந்தக் குட்டிப் பெண் “உன் கதையைப் பற்றித் தான் யோசிக்கிறோம்! பெண்ணே!” என்றார் ராமானுஜர்.
அப்போது ஒரு சிஷ்யர் “குழந்தாய்! கொங்கில் பிராட்டி போல ராமானுஜருக்கு இன்னொரு பெண் சிஷ்யை இருக்கிறாள் தெரியுமா ?” என்றார் “அப்படியா ? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றாள் அந்தப் பெண் ஆர்வமாக.
“அவள் பெயர் திரிபுரா தேவியர். கொங்கில் பிராட்டி போல மிகுந்த அறிவாளி. ஒரு முறை இவரிடம் ஒருவர் ‘நீங்கள் ஏன் திருமாலை மட்டும் வணங்குகிறீர்கள் ? மற்ற தேவதைகளை ஏன் வணங்குவதில்லை ?’ என்று கேட்டார்.
அதற்கு இந்த அம்மையார் ‘எங்கள் குருவான ராமானுஜர் தான் எங்களுக்கு மேலான தெய்வம். அவர் எந்தத் தெய்வத்தை வணங்குகிறாரோ அந்தத் தெய்வத்தைத்தான் நாங்கள் வணங்குவோம். ராமானுஜர் வேறு ஏதாவது தேவதையைச் வணங்கினால் நாங்களும் வணங்குவோம்!” என்றாள்.
“குருவே தெய்வம். அவர் சொல்லுவதே வேதம் என்ற உயர்ந்த தத்துவத்துக்கு உதாரணம் இந்த இரண்டு சிஷ்யைகளும்” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
அப்போது ஒரு சிஷ்யர் “பிள்ளாய்! நீ கூறுவது சரி ! குருவிற்காக, அவர் வணங்கும் திருமாலுக்காகக் கூரத்தாழ்வான் தன் கண்களைத் தியாகம் செய்தார். ராமானுஜர் வேறொரு தேவதையைக் கனவிலும் நினைக்கமாட்டார். வணங்கமாட்டார். ஆனால் அவர் எங்களைப் பார்த்துக் களிமண்ணை வணங்கு என்றால் உடனே அதை வணங்குவோம்!” என்றார் உடனே அந்தப் பெண்.
“மண் பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே!” என்றாள். ராமானுஜர் புன்னகைக்க. பெண் பிள்ளை அடுத்த கதையைத் தொடங்க தயாரானாள்.