இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
தன்னுடைய தலைவனை, இவர் எனக்கு இளையவர் என்றோ அல்லது தன்னுடைய உறவினர் என்றோ அதிக உரிமையெடுத்து அவம் செய்தல் கூடாது. மாறாக, அவர்தம் பதவி, அந்தப் பதவியினால் வரும் நலன்கள், பாதுகாப்பு, மக்கள் தன்மை, நீதி நெறி தவறாமை, இன்ன பிற தன்மைகளால் போற்றுதல் வேண்டும்.
இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டே யாக வேண்டும். என் தந்தை சாதாரண உதவி ஆசிரியராக இருந்த காலத்தில், தலைமை ஆசிரியராக இருந்தவர்களில் பலர் அவருக்கு இளம் பிராயத்தில் இருந்தே நேரடிப் பழக்கத்தில் இருந்தும், அவரை விட இளையோர்களாக இருந்தும், என் தந்தையை ‘அண்ணா!’ என ஆசையோடு அழைப்பவர்களாக இருந்தும், பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்த காலத்தும் கூட, தலைமை ஆசிரியருக்கான இருக்கையில் அமர மாட்டார்!
ஏனென, காரணம் வினவும் போது, “மரியாதை என்பது நபருக்காக மட்டுமல்ல; அவர் சார்ந்த பொறுப்புக் காகவும்” என்பார்!
அதுதான், இக்குறள் சொல்லும் நீதியும்!!
இதையெல்லாம் யார் கற்றுத் தருவது?
– சுரேஜமீ