ஆன்மிகம்

இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!

“சாமி! பஞ்ச பாண்டவர்களின் மூத்தவரான தர்மர் ராஜசூய யாகம் நடத்தித் தன் தம்பிகளுடன் சுகமாக வாழ்ந்து வந்த வந்தார். துரியோதனன் இவர்கள் நன்றாக இருப்பதைக் கண்டு பொறாமைப் பட்டான். இவர்களை எப்படி வீழ்த்துவது என்று யோசித்தான்.

மாமன் சகுனி சூதாட்டத்தில் வல்லவன். சூதாட்டத்தில் இவர்களை வீழ்த்தலாம் என்று தீய யோசனை கூறினான்.தர்மரைச் சூதாட்டத்துக்கு அழைத்தான் துரியோதனன். அரசன் எதற்குக் கூப்பிட்டாலும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லை அரசனுக்கு அது அவமானம். அதனால் தர்மர் அதற்குக் கட்டுப்பட்டு ஒப்புக்கொண்டார்.

சூதாட்டம் நடந்தது. சகுனி சூதாட்டத்தில் குறுக்கு வழியில் வஞ்சகமாகப் பந்தயம் வைத்து ஒவ்வொன்றையும் இழக்க வைத்தான்.தர்மர் முதலில் வீடு, நிலம், ராஜ்யம் முதல்யவற்றை பறிகொடுத்தார். பிறகுத் தன் தம்பிகளைப் பந்தயத்தில் வைத்துத் தோற்றார். அவர்கள் துரியோதனனுக்கு அடிமைகளானார்கள்.

கடைசியில் திரௌபதி மட்டும் மிஞ்சியிருந்தாள். சகுனி வஞ்சனையாகத் தர்மரிடம் பேசி அவளையும் பந்தயத்தில் வைக்கத் தூண்டினான். தர்மர் அவளையும் வைத்துத் தோற்றார். துரியோதனன் பயங்கரமாகச் சிரித்தான். தன் தம்பி துச்சாதனனை அனுப்பி திரௌபதியை அரசவைக்கு இழுத்து வரக் கட்டளையிட்டான்.

துச்சாதனன் திரௌபதியின் தலை மயிரைப் பிடித்து இழுத்து சபைக்கு நடுவில் நிறுத்தினான். துரௌபதி அழுதுகொண்டு சபை நடுவே வந்து நின்றாள். துரியோதனன், கர்ணன் முதலானவர்கள் திரௌபதியை மரியாதை குறைச்சலாகப் பேசினார்கள். பீஷ்மர், துரோணர் முதலானவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார்கள்.

அப்போது துச்சாதனன் ”திரௌபதி உன் கணவர்கள் எங்களுக்கு அடிமை. உன்னையும் பந்தயத்தில் தோற்றார்கள். அதனால் நீயும் எங்கள் அடிமை. அடிமைக்கு எதற்கு இந்த விலை உயர்ந்த உடைகள் என்று அவள் அணிந்திருந்த சேலையைப் பிடித்து இழுத்தான்.

திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உதவிக்கு யாரும் வரவில்லை. தான் அவமானப்படுவதை தன் கணவர்களே செய்வதறியாமல் முழித்துக்கொண்டு இருக்க, துச்சாதனன் வேகமாக இழுக்க ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் துச்சாதனனின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் கையே அவளுக்கு உதவி செய்ய முடியாமல் தவித்தது. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி கைகூப்பி ”சங்குசக்ர கதாபாணே! துவாரகா வாசியே! அச்சுதா! கோவிந்தா! தாமரைக் கண்ணா ! உன்னையே சரணடைந்தேன் ! என்னைக் காப்பாற்று!” என்றாள்.

கண்ணன் எங்கிருந்தோ புடவை சுரக்க அருள் புரிந்தான். துச்சாதனன் திரௌபதியின் சேலையை இழுக்க இழுக்க வந்துகொண்டே இருந்தது. பல மணி நேரம் இழுத்து இழுத்துச் சோர்வடைந்தான் துச்சாதனன். மேலும் இழுக்க முடியாமல் சரிந்து கீழே விழுந்தான்.

பந்தயப்படி பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓர் ஆண்டு மறைந்தும் வாழ வேண்டும் என்ற நிபந்தனையில் காட்டுக்குச் சென்றார்கள்.

“சாமி! நான் அற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்! துரௌபதியைப் போலப் பெருமாளிடத்தில் பரிபூர்ணமாகச் சரணடைய வில்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் யோசித்துக்கொண்டு இருந்தார்“என்ன சாமி யோசிக்கிறீர்கள் ? “ என்றாள் அந்தப் பெண்குட்டி.“நீ ஊரை வீட்டு போகிறேன் என்கிறாய்! ஆனால் ஒரு ஆழ்வார் ஊரைவிட்டுப் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்!” என்றார்

“எந்த ஆழ்வார் சாமி அது ?” என்று ஆர்வமாகக் கேட்டாள் அந்தப் பெண். “தொண்டரடிப்பொடி ஆழ்வார் அச்சுதனே! இடையர் குலத்தில் தோன்றிய கொழுந்தே ! கண்ணா என்று என் வாயினால் சொல்லும்போது உண்டாகின்ற இச்சுவையைத் தவிர எனக்கு வைகுண்டம் கிடைத்தாலும் வேண்டாம்! என்கிறாரே ! கண்ணனின் நாமத்துக்கு அந்தச் சுவை!” என்கிறார்.

“சாமி! எனக்கு ஒரு சந்தேகம் பக்கத்தில் இருந்த தன் ஐந்து கணவர்களை அழைக்காமல் துரௌபதி ஏன் கண்ணுக்குத் தெரியாத கண்ணனை அழைத்தாள் ?” என்றாள்.

ராமானுஜர் புன்சிரிப்புடன் “ஒருத்தி தன் கணவனுடன் இருட்டு பாதையில் நடந்து போகிறாள். கல் தடுக்கி கீழே விழுகிறாள். காலில் அடிப்பட்டு வலிக்கிறது. பக்கத்திலேயே இருக்கும் கணவன் கூப்பிடாமல், ‘அம்மா!’ என்று கண்ணுக்குத் தெரியாத அம்மாவைத் தானே கூப்பிடுகிறாள் ? அதுபோல நமக்குத் தாயும், தந்தையுமான எல்லாமே கண்ணன் தானே! அதனால் தான் திரௌபதி கண்ணனைக் கூப்பிட்டாள்!” என்றார்.

அப்போது ஒரு சிஷ்யர் “பெண்ணே! கஜேந்திரன், பிரகலாதன், திரௌபதி கதைகள் மிக அருமையாகச் சொன்னாய். எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. கேட்கலாமா ?” என்றார்.

“கேளுங்கள் சாமி! தெரிந்தால் சொல்லுகிறேன்!” என்றாள் அந்தப் பெண்.

சிஷ்யர் தொடர்ந்தார் “பிரகலாதன் என்ற அசுரனுக்கு நரசிம்மர் தூணைப் பிளந்துகொண்டு வந்தார். கஜேந்திரன் என்ற யானைக்கு வைகுண்டத்திலிருந்து கருடன் மீது ஏறி வந்தார். ஆனால் திரௌபதி என்ற பெண்ணுக்கு மட்டும் இருந்த இடத்திலிருந்தே அருள் புரிந்தார். ஒரு அசுரன், விலங்கு கூப்பிட்டதற்கு வந்த பெருமாள் ஏன் ஒரு பெண் கூப்பிட்டதற்கு வரவில்லை ?” என்றார்.

அந்தப் பெண் விடை தெரியாமல் ராமானுஜரைப் பார்த்தாள்.

ராமானுஜர் புன்னகையுடன் “’கண்ணன் கீதையில் ’பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் ; தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே என்கிறார். அதாவது (சாது)நல்லவர்களைப் பாதுகாக்கவும், (துஷ்டர்களை)கெட்டவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்’ என்கிறார்.

சாதுவான யானை பல காலமாகச் சண்டை போட்டு, இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று சரணாகதி செய்தது. துஷ்டனான முதலையை அழிக்க ஓடோடி வந்தார். யானையைக் காத்தார். அந்த யானை தன் கையில் வைத்திருந்த தாமரையை ஏற்றுக்கொள்ள வந்து தானே ஆக வேண்டும் ? அதனால் அங்கே வந்தார்.

சாதுவான பிரகலாதனைக் காக்கத் துஷ்டனான இரணியனை அழித்தார். ’இங்கு இருக்கிறானா ?’ என்ற இரணியனின் கேள்விக்குப் பிரகலாதன் ‘இங்கும் இருக்கிறான்’ என்றான். பிரகலாதன் சொன்ன வார்த்தையை உண்மையாக்கப் பெருமாள் தூணைப் பிளந்துகொண்டு வந்தார்.

சாதுவான திரௌபதி தன்னால் இனி இந்தத் துஷ்டர்களிடம் தன்னை காத்துக்கொள்ள முடியாது என்று கண்ணனிடம் சரணாகதி செய்தாள். சரணாகதி செய்தபிறகு திரௌபதி பெருமாளின் சொத்து. துரியோதனனின் கூட்டமே துஷ்டர்கள் , வேடிக்கை பார்த்த பீஷ்மர், துரோணர் முதலியவர்களும் துஷ்டர்கள். அவளைக் காப்பாற்றாத கணவர்களும் துஷ்டர்களே.

கண்ணன் அங்கே வந்திருந்தால் முதலில் இதை எல்லாம் சகித்துக் கொண்டு இருந்த பாண்டவர்களைத் தான் முதலில் வீழ்த்தியிருப்பான். அது திரௌபதியின் தாலிக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்! அவளுடைய தாலி பாக்கியத்துக்காகக் கண்ணன் அங்கே வரவில்லை. அதனால் புடவையைச் சுரக்கச் செய்து அவளைக் காப்பாற்றினான்” என்று ராமானுஜர் சொல்லி நிறுத்தினார்.

எல்லோரும் கண்ணனை நினைத்து அமைதியாக இருந்தார்கள்.ராமானுஜர் தொடர்ந்தார் “குழந்தாய்! திரௌபதி ’கோவிந்தா’ என்று கூப்பிட்ட உடன் உதவினாலும் உடனே அங்குப் போக முடியவில்லையே! இன்னும் அவளுடைய கதறல் என் இதயத்தைவிட்டு அகலவில்லை என்று பின்பு கண்ணன் கூறுகிறான்.

வட்டி கொடுக்காமல் கடன் மேலும் மேலும் அதிகமாவது போல அவளைக் கஷ்டத்துக்கு உள்ளாகினேனே என்ற வருத்தம் மேலும் மேலும் அதிகமாகிறது என்றான். கண்ணன் பாண்டவத் தூதனாகச் சென்றது, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தது எல்லாம் திரௌபதிக்காகத் தான்” என்றார்.

அப்போது ஒரு சிஷ்யர் “சரணாகதி செய்தபிறகு நாம் பெருமாளின் சொத்து. அந்தச் சொத்துக்கு ஏதாவது ஆபத்து என்றால் பெருமாள் பொங்கி எழுந்துவிடுவார்!” என்றார்.

உடனே அந்தப் பெண் “இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே!” என்றாள்.

“இது என்ன புதுக் கதையாக இருக்கிறது !” என்று தன் சிஷ்யர் ஒருவரைப் பார்த்துப் புன்னகைத்தார் ராமானுஜர்.

(Visited 173 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close