நதியிசைந்த நாட்கள் – 2 : அத்தியாயம் – 5 : I Love u I‘ll kill u
90’s என்னும் பொற்காலம். பாலா என்றொரு நண்பன் திருச்சி உறையூரில் உள்ள இராமலிங்க நகரில் வசித்து வந்தான். அவன் தந்தை காவல் துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றி வந்தார். தந்தை போலீஸ்கார் என்பதால் திமிருடன் திரிவது என்ற குணங்கள் எல்லாம் அவனிடம் அறவே கிடையாது. நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, கேலி, அரட்டை போன்ற சகல நல்ல விஷயங்களும் இருந்தாலும் லக்ஷ்மன் ரேகாவைத் தாண்ட மாட்டான். அவனால் தந்தைக்கு எந்தவொரு கெட்ட பெயரும் வராது பார்த்துக் கொள்வான். நன்றாகப் படிப்பான். பெற்றோர் தந்த கண்டிப்புடனான சுதந்திரத்தை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டான்.
பாலாவின் ரசனை சற்று வித்தியாசமானது. ரஜினி கமல் போன்ற வழமையான சச்சரவுகளில் இருந்து ஒதுங்கி இருப்பான். இசை விருப்பமும் சற்று விசித்திரமாக காணப்படும். கர்நாடிக், கஸல் என்று ஒரு பக்கம் கொடி ஏற்றுவான். என்னைப் போல் ஹரிஹரனின் கஸல் என்றால் இஷ்டம். அதைத் தாண்டி புபேந்தர், போன்ற கஸல் கலைஞர்களையும் கொண்டாடுவான். மஹாராஜாபுரம் சந்தானம். எம்.எஸ் அம்மா, பாலமுரளி கிருஷ்ணா என்று கர்நாடகா சங்கீதத்திலும் விசாலமான பார்வை கொண்டு ரசிப்பான். உன்னிகிருஷ்ணன் என்ற என் விருப்பத்தையும் ஏற்றுக் கொண்டான். பின்பு சினிமா பாடல்களும் பாடி உன்னி வெகு ஜன ரசிகர்களிடம் பரவலாக போய் சேர்ந்தது தனிக் கதை.
பாலாவுடன் சரி சமமாக பேச முடியாத ஒரு இசை சமாச்சாரம் உண்டென்றால் அது ஆங்கில பாப் இசைப் பாடல்கள். அதில் அவன் மாஸ்டர். எலிமெண்ட்ரி ஸ்கூல் காலத்தில் வீட்டில் கேட்ட Boney M பாடல்கள் அடுத்து தூர்தர்ஷனில் சனிக்கிழமை காலை eurotops என்ற பெயரில் அரை அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு ஒளிபரப்பாகும் ஆங்கிலப் பாப் பாடல்கள் தவிர்த்து அந்த இசை கேட்கும் சூழல் எனக்கு அப்போது இல்லை. eurotops பார்த்தால் அதில் பெரும்பாலும் இந்திய பாப் இசைக் கலைஞர்களின் பாடல்கள் தான் பெரும்பாலும் ஒளிபரப்பாகும்.
ரெமோ ஃபெர்னாண்டஸ், பார்வதி கான், ஷரோன் பிரபாகர், அலிஷா சினாய்… இந்த நபர்கள் மட்டுமே பரிச்சயம்.
என்னுடைய இந்த பரிதாப நிலை கண்டு பாலா கிண்டல் அடித்ததில்லை. 93 ஆம் வருடம் என்று நினைவு (பாலாவுடன் எனக்கு பழக்கம் உண்டானது 92 ஆம் ஆண்டில்) பாலா இரண்டு ஆங்கில ஆல்பங்களை வெகுவாக ஸ்லாகித்துக் கொண்டிருந்தான். வழக்கமான டீக்கடைக்கு வந்து அவனுக்குப் பிடித்த கேஸட்டைப் போட்டு ரசித்து ரசித்து பாடல்களைக் கேட்பான்.
ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பாடல் துவக்கத்தில் ஜார்ஜியன் சான்ட்ஸ் ஒலிக்கும் சான்ட்ஸ் சொல்லி முடித்த பின் ஒரு தாள கட்டு வரும் பாருங்கள், நாடி நரம்பை எல்லாம் சுண்டி இழுக்கும்… சீரான ரிதம் மாறாது தாளக்கட்டு ஒலித்தபடி பாடலை வழி நடத்தும், கொஞ்சம் கொஞ்சமாக பிற வாத்திய இசைக் கருவிகளின் இசை சேர்க்கை இணையத் துவங்கும். கேட்டவுடனே மனம் செய்த சங்கல்பம். “இந்த ஆல்பம் குறித்த விவரங்களை பாலாவிடம் கேட்டுத தெரிந்து கொள்ள வேண்டும், ஒரிஜினல் கேஸட்டை வாங்க வேண்டும், வீட்டு டேப் ரெக்கார்டரில் அலற விட்டு கேட்க வேண்டும். ஏரியாவில் கெத்தாக வளைய வர வேண்டும்.
பாலாவிடம் கேட்டவுடன் அவன் சொன்னது “எனிக்மா” மேற்கொண்டு பேசவிடவே இல்லை. சரி சரி என்று சொல்லி அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தேன். அது எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனம் என்பதை பல வருடங்கள் கழித்து மெட்ராஸில் அண்ணாநகர் கனக்ஷன்ஸ் ஸ்டோரில் ஒரு ஒரிஜினல் ஆடியோ ஸிடி வாங்கும் போது தான் தெரிந்து கொண்டேன். 90 களில் என்னிடம் மற்றுமொரு குறைபாடு உண்டு. நெருங்கிய ஸ்நேகிதர்களிடம் கூட ஒரு அளவுக்கு மேல் பேச மாட்டேன். “ரிசர்வ்ட் டைப், கூச்ச சுபாவி, ஆம்பளை இப்படி இருந்தா வாழ்க்கைல உருப்பட முடியாது” இது போன்ற சொல்லாடல்களை வெகுமதியாக பலரிடமிருந்து பெற்றேன்.
சிங்காரதோப்பு எஸ்,வி,கே ஆடியோ சென்டருக்கு சென்று எனிக்மா கேஸட் வேண்டும் என்று கேட்டேன் பதிலுக்கு அவர் விசாரித்ததை காதில் வாங்கிக்கொள்ளாமல் எனிக்மா என்று மீண்டும் கேட்டேன். கடைக்காரர் சிரித்தபடி கேஸட்டைத் தந்தார்.
Cross of Changes Enigma 2
கேஸட்டின் முகப்பில் இருந்த வாக்கியம் இது தான்!
வீட்டுக்கு வந்து வாக்மேனில் ஒவ்வொரு பாடலாக கேட்க ஆரம்பித்தேன்.
Return to Innocence
We came out from the deep
Loneliness
I Love u I’ll kill u
கேட்கக் கேட்க ஒவ்வொரு பாடலும் வசீகரித்தது. மனதை அலைபாய வைத்தது. திக்கு முக்காட வைத்தது. சொல்லத் தெரியாத இதுவரை நுகராத வேறு லோகத்தை மனதுக்கு பழக்கியது…
ஒவ்வொரு பாடலும் மனதை குதுகலத்தில் ஆழ்த்தினாலும், பாலாவுடன் சேர்ந்து டீக்கடையில் கேட்ட அந்த ஒரு பாடல் கேஸட்டில் இல்லை… ஏன் என்று காரணம் தெரியவில்லை… அந்தப் பாடலின் துவக்க வரிகள் என்னவென்று கூடத் தெரியாது.
டி. ராஜேந்தர் போல் இசையை வாய் மொழியில் “டுன்டுன்” என்று சொல்லி கேஸட் கடைக்காரரிடம் விசாரித்தால் அவர் நம்மை என்ன நினைப்பார் என்று மனம் யோசித்தது. தாழ்வு மனப்பான்மை வெள்ளம் போல் பாய்ந்தோடியது.
இன்னொரு கொடுமை அன்று ஒரே ஊரில் வசித்து வந்த போதும் சரி இன்று பாலா எங்கே இருக்கிறான் என்ற தெரியாத சூழலிலும் சரி அந்தப் பாடல் குறித்து பாலாவிடம் நான் விசாரிக்கவே இல்லை. ஏன் என்ன காரணம்? விளங்கவுமில்லை…
Cross of changes ஆல்பம் பற்றிய விரிவான பார்வை, அந்தப் பாடலை எப்படி கண்டுபிடித்தேன் என்ற சங்கதி, Enigma ஆல்பங்கள் பற்றி நான் முழுமையாக எப்போது தெரிந்து கொண்டேன்? அனைத்தையும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
அடுத்த அத்தியாத்தில் “Enigma” நிறைவடையும். தொடர் ஆல்பங்கள் குறித்து மட்டும். “Enigma” க்கு முடிவேது?