திருப்பி அடியுங்கள், நாங்கள் குறுக்கே வரமாட்டோம் – பாக் விஷயத்தில் அமெரிக்கா.
புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கு ஃபோன் செய்து பேசினார். அப்போது தற்காப்புத் தாக்குதல் நடத்துவது இந்தியாவின் உரிமை என்று அவர் கூறினார்.
இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திடம் பேசிய போல்டன் “நான் அஜித் டோவலிடம் இரண்டு முறை பேசினேன். முதலில் தாக்குதலுக்கு கண்டனமும் இறந்த வீரர்களுக்கு இரங்கலும் தெரிவித்தேன். இன்று (வெள்ளிக்கிழமை)காலை மீண்டும் அவரை அழைத்துப் பேசினேன். நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
பாகிஸ்தான் தன் மண்ணில் தீவிரவாத கும்பல்களை வளர்த்துவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தீவிரவாதிகளுக்கு இடம் கொடுப்பதை நிறுத்தாதவரை பாகிஸ்தான் அமெரிக்காவிடம் உதவிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. பாகிஸ்தானின் இந்த தீவிரவாத ஆதரவு சர்வதேச பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பது. இதை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது.
இந்தியா திருப்பித் தாக்குவதாக் இருந்தால் அதில் அமெரிக்கா எந்த வகையிலும் தலையிடாது. திருப்பி அடிப்பது இந்தியாவின் உரிமை. அதை எப்படிச் செய்வது என்பதும் அவர்கள் உரிமை. தீவிரவாதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையை இந்தியா எடுத்தாலும் அமெரிக்கா துணை நிற்கும் என்று அஜித் டோவலுக்கு உறுதி அளித்தேன்” என்று கூறினார்.
அமெரிக்காவின் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பேசுகையில், “தீவிரவாதிகளுக்கு உதவி செய்து, இருக்க இடம் கொடுப்பதன் மூலம் பாகிஸ்தான் இதுவரை அடைந்திருப்பது குழப்பமும், வன்முறையும், உயிரிழப்பும் தான். பாகிஸ்தான் வளர்த்துவிடும் தீவிரவாதிகள் உலகில் வன்முறை, பயங்கரம், இழப்பு இவற்றையே பெருக்குகிறார்கள். உடனடியாக பாகிஸ்தான் இவர்களை அடக்கவில்லை என்றால் அமெரிக்கா சம்பந்தப்பட்டு எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்,” என்றார்.