பிப்ரவரி 9 – சதுரங்க வீரர் பரிமர்ஜன் நேகி பிறந்ததினம்
நம் நாட்டின் மிகப் பழமையான ஆனால் தற்காலத்தில் கிரிக்கெட் மோகத்தில் பேராதரவு இல்லாத விளையாட்டுக்களில் ஒன்று சதுரங்கம். இதில் நம் நாட்டில் பலர் சிறந்து விளங்குகின்றனர். அவர்களில் இளையவரான கிராண்ட் மாஸ்டர் பரிமர்ஜன் நேகி பிறந்ததினம் இன்று. பிப்ரவரி 9, 1993ல் புதுதில்லியில் பிறந்த பரிமர்ஜன் சிறு வயதில் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடினார்.
பள்ளி, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இவரது திறமை கண்டு இந்திய செஸ் சிறுவர் அணியில் 10 வயதுக்குக் குறைந்தோருக்கான 2002 ஆசியப் போட்டியில் விளையாடத் தேர்வானார். அங்கே சாம்பியன் பட்டம் வென்றார். பிறகு 2005-06 காலகட்டத்துக்கான இங்கிலாந்து ஹேஸ்டிங்க்ஸ் நகரில் நடந்த சர்வதே சதுரங்க காங்கிரஸில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கான முதலடி எடுத்து வைத்தார்.
அதன் பிறகு புதுதில்லியில் நடந்த சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்றார். 2006ல் ருஸ்லான் ஷெர்பகோவ் என்ற ரஷ்ய கிராண்ட் மாஸ்டருடன் சமன் செய்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். ரஷ்யாவில் சட்கா என்ற இடத்தில் வென்றதன் மூலம் 13 வயது 4 மாதங்கள் 20 நாட்களில் இளவயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அதன் பிறகு ஜூன் 2008ல் கலிஃபோர்னியா சர்வதேச ஓப்பன் சதுரங்கப் போட்டியில் தோல்வியே காணாமல் வென்றார். ஆகஸ்ட் 2008ல் உலக ஜூனியர் சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றார். 2009ல் கோபென்ஹாகன் நகரில் நடைபெற்ற 10க்கு 8.5 புள்ளிகள் பெற்று ரஷ்ய வீரர் போரிஸ் அவ்ருக் என்பவருடன் சமன் செய்து பட்டம் வென்றார். அதே ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற டத்தோ ஆர்தர் டான் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.
2010ல் தேசிய சதுரங்க பிரீமியர் போட்டியில் பட்டம் வென்றார். அரசு இவருக்கு அதே ஆண்டு அர்ஜுனா விருது கொடுத்து கௌரவித்தது. 2012ல் வியட்நாமில் ஆசிய சதுரங்க போட்டியில் வென்றார். அதே ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்துக்கான போட்டியில் சமன் செய்து முதலிடம் பெற்றார். 2013ல் மீண்டும் கோபென்ஹாகன் போட்டியில் வென்றார். 2014ல் நார்வேயில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்தார்.
தில்லி அமிட்டி சர்வதேச பள்ளியில் கல்வி முடித்த இவர் இதன்பிறகு சற்றே உயர்கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வருகிறார். சதுரங்க விளையாட்டு முறைகள் குறித்து இவர் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.